ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இரவு பகலாக நடவடிக்கை பாளை வஉசி மைதானத்தில் மறு கட்டமைப்பு பணிகள் தீவிரம்

நெல்லை : பாளை வஉசி மைதானம் மறு கட்டமைப்பு பணி இரவு பகலாக நடந்து வருவதால்  60 சதவீத பணிகள் நிறைவுபெற்றுள்ளன. இங்கிருந்த பழைய மேடையை அகற்றிவிட்டு விஐபி, வீரர்கள் தங்கும் வசதியுடன் நவீன மாடம் அமைக்கப்படுகிறது.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை மாநகரில் பல்வேறு சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதில் தனித்துவமிக்க பணியாக வரலாற்றுச் சிறப்புமிக்க பாளை வஉசி மைதானம் மறு கட்டமைப்பு பணி திகழ்கிறது. இம்மைதானம் பல புகழ்பெற்ற ஹாக்கி வீரர்களை உருவாக்கிய பெருமைக்குரியது ஆகும். இந்த பாரம்பரியமிக்க வஉசி மைதானத்தை கடந்த 1965ம் ஆண்டு அப்போதைய சென்னை மாநில  அமைச்சராக இருந்த எஸ்எம்ஏ மஜீத் திறந்து வைத்தார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை இங்கு சுதந்திரதினவிழா மற்றும் குடியரசு தினவிழா கொண்டாட்டங்கள், பல்கலைக்கழகம் சார்பில் தேசிய அளவிலான விளையாட்டுப்போட்டிகள், புத்தகத்திருவிழா, பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்து வந்தன. இதனால் எப்போதும் இம்மைதானம் களைகட்டி இருந்தது. பழமைவாய்ந்த இம்மைதானத்தை ரூ.14 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி கடந்த பிப். 25ம் தேதி துவங்கியது. புதிய மறுகட்டமைப்பின் படி இந்த மைதானத்தில் மொத்தம் 6 பார்வையாளர்கள் கேலரிகள் மேற்கூரையுடன் அமைவது குறிப்பிடத்தக்கது.

இதில் 2 கேலரிகள் விஐபிகளுக்கானதாக இருக்கும். இது தவிர தற்போது இடிக்கப்படாமல் உள்ள அறைகளுடன் கூடிய மேடையும் விரைவில் இடிக்கப்பட்டு இங்கும் அதிநவீன மாடம் கட்டப்பட உள்ளது. இதில் விஐபிகள், விளையாட்டு வீரர்கள் ஓய்வு அறைகள், நவீன மேடை உள்ளிட்ட வசதிகளும் அமைய உள்ளன. இரவு பகலாக மேற்கொள்ளப்பட்ட பணிகளால் சுமார் 5 மாதங்களில் 60 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. 12 மாதங்களுக்குள் கட்டிமுடிக்க திட்டமிடப்பட்ட நிலையில் மழை குறுக்கிடாமல் இருந்தால் அடுத்த 3 மாதங்களில் கேலரிகள் அமைக்கும் பணியை முடிக்கவும் பிரதான மேடையுடன் கூடிய அறைகள் கட்டும் பணியை 5 முதல் 6 மாதங்களுக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

 தற்போது தினமும் 60 முதல் 70 பணியாளர்கள் கட்டிட வேலை செய்கின்றனர். இப்பணிகள் முடிந்த பின்னர் வாய்ப்பிருந்தால் வெளிப்பகுதியில் கடைகள் அமைக்கவும் திட்டமுள்ளது.  கட்டுமானப்பணி முழுமை பெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் போது மேலும் பல விளையாட்டு வீரர்களை இந்த மைதானம் உருவாக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

வரலாறு முக்கியம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க வஉசி மைதானம் சீரமைப்பு பணி முடிந்ததும் இந்த மைதானத்தின் பழமை வரலாற்றை வரும்கால தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் வகையில் பழைய கல்வெட்டுக்களையும் மக்கள் பார்வையில்படும் வகையில் பதித்து வைக்கவேண்டும் என நெல்லை மண்ணின் மைந்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: