கேல் ரத்னாவை நீக்கியதால் ராஜீவ் பெயரில் ‘ஐடி’ விருது: ஒன்றிய அரசுக்கு பதிலடி

மும்பை: ஒன்றிய அரசு ராஜீவ் காந்தி கேல் ரத்னா பெயரை நீக்கியதால், மகாராஷ்டிரா அரசு ராஜீவ் காந்தி ஐடி விருதை அதிரடியாக அறிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரில் ஒன்றிய அரசின் சார்பில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ராஜிவ் காந்தி கேல் ரத்னா வழங்கப்பட்டு வந்தது. கடந்த வாரம், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை ‘மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது’ என்ற பெயர் மாற்றம் செய்து பிரதமர் மோடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ராஜீவ் காந்தியின் பெயரில் வழங்கப்பட்ட விருதை மாற்றம் செய்ததற்கு பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந்தன. குறிப்பாக காங்கிரஸ் கட்சி ஒன்றிய அரசை கடுமையாக விமர்சனம் செய்தது.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசும், ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தது. தொடர்ந்து புதிய அறிவிப்பு ஒன்றை அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே வெளியிட்டுள்ளார். அதில், ‘ஐடி துறையில் சிறந்த விளங்கும் நிறுவனங்களுக்கான ராஜீவ் காந்தி பெயரில் ஐடி விருது வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. ராஜீவ் காந்தியின் பிறந்த நாளான ஆகஸ்ட் 20ம் தேதியன்று, இந்த விருது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். விருதுக்கு தகுதியானவர்களை மகாராஷ்டிரா தகவல் தொழில்நுட்பக் கழகம் தேர்ந்தெடுக்கும்’ என்றார்.

Related Stories: