தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் செப்.21 வரை நடைபெறும்!: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு..!!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரை செப்டம்பர் 21ம் தேதி வரை நடத்த அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றிருக்கிறது. சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டமானது நடைபெற்றது. தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் 2021 - 22ம் ஆண்டுக்கான முழு நிதிநிலை அறிக்கை வருகின்ற 13ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு நடக்கும் முதல் பட்ஜெட் தாக்கல் இதுவாகும்.

அதை தொடர்ந்து 14ம் தேதி வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதற்கு பின்னர் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும். அந்த கூட்டத்தில் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். ஆனால் தற்போது பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாகவே அலுவல் ஆய்வு கூட்டமானது சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை. மற்ற கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

அரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற கூட்டத்தில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரை செப்டம்பர் 21ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. முதலாவதாக நிதிநிலை அறிக்கையும், அதனை தொடர்ந்து மறுநாள் வேளாண்மை தொடர்பான தனி நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. இதுகுறித்து அதிகாரபூர்வமாக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அறிவிக்க இருக்கிறார். துறை ரீதியாக மாநில கோரிக்கை விவாதமும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: