மவுன சுவாமிகள் மடத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு

திருப்போரூர்: திருப்போரூரில் உள்ள  மவுன சுவாமிகள் மடத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழ்நாடு முழுவதும் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் சொத்துக்கள் கண்டறியப்பட்டு அதன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. மேலும், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய கோயில்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதையொட்டி, கடந்த 29ம் தேதி அமைச்சர் மற்றும் ஆணையர் ஆகியோர் திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது திருப்போரூரில் மவுன சுவாமிகள் மடம் இருப்பதாகவும், இந்த மடத்துக்கு சொந்தமான கண்ணகப்பட்டு கிராமத்தில் விவசாய நிலங்கள் இருப்பதாகவும், அவை முறைகேடாக விற்பனை செய்யப்படுவதாகவும் பொது மக்களில் சிலர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து மவுன சுவாமிகள் மடம் குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இதை தொடர்ந்து இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் பாலசுப்பிரமணியன், ஆய்வாளர் சிவகாமி, கோயில் செயல் அலுவலர் சக்திவேல், மேலாளர் வெற்றிவேல் ஆகியோர் கண்ணகப்பட்டு கிராமத்தில் உள்ள மௌன சுவாமிகள் மடத்தில் ஆய்வு நடத்தினர். அங்கு, மடத்தின் சொத்துக்கள் விபரம், மடத்தை நிர்வகிப்பவர்கள் யார் என்பது குறித்த விபரங்களை அறிந்தனர். தொடர்ந்து, இதுதொடர்பாக ஆணையருக்கு அறிக்கை அளித்து, அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மவுன சுவாமிகள் மடத்தை திருப்போரூர் கந்தசுவாமி கோயில் மற்றும் சிதம்பர சுவாமிகள் மடத்துடன் இணைக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்படும் எனன அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>