தவனம்பள்ளி அடுத்த பட்டினம் கிராமத்தில் அரசு பள்ளி அருகே உள்ள செல்போன் டவரை அகற்ற வேண்டும்-சித்தூர் கலெக்டர் ஆபீசில் கோரிக்கை மனு

சித்தூர் : தவனம்பள்ளி அடுத்த பட்டினம் கிராமத்தில் அரசு பள்ளி அருகே உள்ள செல்போன் டவரை  அகற்ற கோரி கலெக்டர் ஆபீசில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

சித்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் முருகன் ஹரிநாராயணாவிடம் தவனம் பள்ளி அடுத்த பட்டினம் கிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் நேற்று கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

சித்தூர் மாவட்டம், தவனம்பள்ளி அடுத்த பட்டினம்  கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளி சுற்றுச்சுவர் அருகே உள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தில் அதேபகுதியை  சேர்ந்த ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மண்டல தலைவர் பிரதாப் போலி ஆவணங்கள் தயாரித்து நிலத்தை அவரது பெயருக்கு மாற்றியுள்ளார். மேலும், அப்பகுதியில் செல்போன் டவர் அமைத்துள்ளார்.

இதுகுறித்து எங்கள் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால், அவர் எனக்கு சொந்தமான நிலத்தில் நான் செல்போன் டவர் அமைத்துக்கொள்ள யாரிடமும் அனுமதி பெற தேவையில்லை என தெரிவித்தார். இதனால், அந்த செல்போன் டவரில் இருந்து வரும் ரேடியேசன் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் உடல்நிலை பாதிப்பு ஏற்படும்.

இதுகுறித்து மண்டல வருவாய்த்துறை அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் அவர் ஆளும் கட்சியை சேர்ந்தவர் என்பதால் அதிகாரிகள் அவர் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். எனவே, அரசு உயர்நிலை பள்ளி சுற்றுச்சுவர் அருகே அமைக்கப்பட்டிருக்கும் செல்போன் டவரை அகற்றி வேறு இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.மனுவை பெற்று கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Related Stories: