கொள்முதல் நிலையம் திறக்ககோரி நெல்மூட்டை வாகனங்களுடன் சாலை மறியல்-பொன்னமராவதி அருகே பரபரப்பு

பொன்னமராவதி : பொன்னமராவதி அருகே உள்ள சடையம்பட்டியில் நெல் கொள்முதல் நிலையம் முன்பாக நெல் மூட்டை வாகனங்களுடன் சாலையில் நிறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.தமிழகத்தில் கிராமப்புற விவசாயிகளிடமிருந்து விளைவித்த நெல்லை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக அரசே நேரடியாக நெல்கொள்முதல் நிலையத்தை அமைத்து விவசாயிகளிடம் பெற்ற நெல்லிற்கு கூடுதல் விலை நிர்ணயம் செய்து வழங்கி வருகிறது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள சடையம்பட்டியில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று சுற்றுவட்டாரத்தில் உள்ள சடையம்பட்டி, முள்ளிப்பட்டி, உசிலம்பட்டி, ஒலியமங்கலம், அம்மாபட்டி, நெய்வேலி, கொன்னைபட்டி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் நெல் மூட்டைகளை ஏற்றி வந்த டிராக்டருடன் சடையம்பட்டி நெல் கொள்முதல் நிலையத்தின் முன் சாலையில் நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த துறை அதிகாரிகளிடம், எங்களது நெல் மூட்டைகளை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று விசாயிகள் கோரிக்கை வைத்தனர். மேலும் சரிவர செயல்படாத நெல் கொள்முதல் நிலையம் தொடர்ந்து செயல்பட வேண்டும், பொன்னமராவதி ஒன்றியத்தில் 42 கிராம பஞ்சாயத்துக்கும் ஒரே ஒரு நெல் கொள்முதல் நிலையம் இருப்பதால் மிகுந்த சிரமப்பட்டு வருகிறோம். மேலும் கூடுதல் நெல் கொள்முதல் நிலையத்தை அரசு திறக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் நெல் கொள்முதல் நிலைய மதிப்பீட்டாளர் நெல் கொளுமுதல் நிலையத்திற்க்கு வருவதே கிடையாது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவரின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இது போன்ற சில பணியாளர்களால் அரசின் திட்டங்கள் பாலாகிவிடுவதாக விவசாயிகள் கூறி வருகின்றனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு அடைந்தது அரசு பேருந்து சிறை பிடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்னமராவதி தாசில்தார் ஜெயபாரதி காரையூர் காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories: