பணம் தர மறுத்ததால் ஆத்திரம் கல்லால் தாக்கி வாலிபர் கொலை: வழிப்பறி ஆசாமிகள் வெறிச்செயல்

ஊத்துக்கோட்டை: திருவண்ணாமலையை சேர்ந்தவர் மதன்குமார்(24). பிளம்பர். கடந்த 31ம் தேதி நண்பர்களுடன் அருகில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக சென்றார். ஆனால், ஏடிஎம்மில் பணம் இல்லாததால் அவர்கள் திரும்பி வந்தனர். இதையறிந்த, பூச்சிஅத்திப்பேடு பகுதியை சேர்ந்த 2 மர்ம நபர்கள் மதன்குமாரை வழிமடக்கி கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். இதனால் மதன்குமார் மற்றும் அவரது நண்பர்கள் மர்ம நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில், மர்ம நபர்களுக்கு ஆதரவாக மேலும், 5 பேர் அங்கு வந்தனர். இதனை கண்டு மதன்குமாரும், அவரது நண்பர்களும் அங்கிருந்து தப்பியோடினர். தொடர்ந்து, மர்ம நபர்கள் மதன்குமாரையும் அவரது நண்பர்களையும் விரட்டிச்சென்றனர்.

அப்போது, அவர்கள் கையில் மதன்குமார் சிக்கிக்கொண்டார். இதில், மதன்குமாரை பிடித்து 5க்கும் மேற்பட்ட வாலிபர்கள் கல்லால் தாக்கி சரமாரியாக அடித்தனர். இதில், மதன்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, மர்ம நபர்கள் மதன்குமாரின் சடலத்தை பூச்சிஅத்திப்பேடு கொசஸ்தலை ஆற்றில் போட்டு விட்டு அங்கிருந்து தப்பினர். இந்நிலையில், நேற்று ஆடு மேய்க்க சென்ற சிலர் அழுகிய நிலையில் இருந்த மதன்குமாரின் உடலை பார்த்து அலறியடித்து ஓடினர். தகவலறிந்த ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாரதி மற்றும் வெங்கல் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மதன்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

>