நிபுணர்கள் எச்சரிக்கை கேரளாவில் 3வது அலை ஆரம்பம்?

புதுடெல்லி: கேரளாவில் தினசரி தொற்று அதிகரித்து வரும் நிலையில், இது கொரோனா 3வது அலையின் ஆரம்பமாக இருக்கலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா 2வது அலையே இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. தினசரி பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், கேரளாவில் கடந்த சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கிறது. ஜூன் 4ம் தேதி முதல் ஜூலை கடைசி வாரம் வரை தினசரி பாதிப்பு 12 ஆயிரம் முதல் 14 ஆயிரமாக இருந்த நிலையில், கடந்த 6 நாட்களாக தினசரி பாதிப்பு 20 ஆயிரம் முதல் 22 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இது நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 50 சதவீதமாகும்.

ஏற்கனவே இம்மாதமே இந்தியாவில் கொரோனா 3வது அலை தொடங்கும் என்றும் அக்டோபரில் உச்சத்தை எட்டும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், கேரளாவில் தொற்று பரவல் தீவிரமாக இருப்பது 3வது அலையின் ஆரம்பமாக இருக்கலாம் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தொற்றுநோயியல் நிபுணரான ராமன் குட்டி அளித்த பேட்டியில், ‘‘இது கொரோனா 3ம் அலையின் ஆரம்பமாக இருக்கலாம். எனவே நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேரளாவில் ஆரம்பத்தில் இருந்தே கொரோனா பாதிப்பு நிலவரம் சீராக இல்லை. ஆனாலும் அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது’’ என்றார். ஆனாலும் இதுதொடர்பாக கேரள அரசு ஆதாரப்பூர்வமாக எதையும் கூறவில்லை. ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று விடுத்த அறிக்கையில், ‘’44 மாவட்டங்களில் தொற்று விகிதம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கிறது. இன்னும் 2வது அலை முழுமையாக முடியவில்லை. கேரளா, மகாராஷ்டிரா உட்பட 6 மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது’’ என கூறப்பட்டுள்ளது.

* வுகானில் அனைவருக்கும் பரிசோதனை

சீனாவில் டெல்டா வைரசால் ஓராண்டுக்குப்பிறகு மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால், வுகான் மாகாணம் முழுவதும் 1.1 கோடி மக்களுக்கும் பரிசோதனை நடத்த சீன அரசு உத்தரவிட்டுள்ளது. பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, ஆஸ்திரேலியாவிலும் பாதிப்பு அதிகரிக்கிறது. உலக அளவில் கொரோனா தொற்று 20 கோடியை நெருங்கி உள்ளது.

தினசரி தொற்று 30,000 ஆக குறைந்தது

*இந்தியாவில் தினசரி பாதிப்பு திடீரென 40,000க்கு மேல் அதிகரித்த நிலையில் 6 நாட்களுக்குப் பிறகு நேற்று மீண்டும் 30,000 ஆக சரிந்தது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 30,549 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 3 கோடியே 17 லட்சத்து 26 ஆயிரத்து 507.

* கடந்த 24 மணி நேரத்தில் 422 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி 4 லட்சத்து 25 ஆயிரத்து 195.

*சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 4 ஆயிரத்து 958.

Related Stories: