மணமான 1 மாதத்தில் பரிதாபம்; டூவீலர் மீது அரசு பஸ் மோதி போலீஸ்காரர் பலி: மாமியார் வீட்டிற்கு சென்றபோது சோகம்

தர்மபுரி: தர்மபுரி அருகே ஆடிப்பெருக்கிற்காக மாமியார் வீட்டிற்கு சென்ற புதுமாப்பிள்ளை போலீஸ்காரர் அரசு பஸ் மோதி பலியானார். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பனைகாணள்ளியைச் சேர்ந்தவர் காமராஜ். இவரது மகன் புகழேந்தி (28). இவர் திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கும் ஓசூர் அருகே உள்ள அத்துகானஹள்ளியைச் சேர்ந்த நாகராஜ் மகள் கவுதமி (23) என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன் திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த சில வாரங்களில் புகழேந்தி வேலைக்கு சென்று விட்ட நிலையில், கவுதமி தனது தாய் வீட்டில் இருந்து வந்தார். இன்று ஆடி 18 பண்டிகைக்காக விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த புகழேந்தி, மாமியார் வீட்டிற்கு விருந்துக்காக நேற்று மதியம் டூவீலரில் புறப்பட்டுச்சென்றார். மகேந்திரமங்கலம் அருகே சென்றபோது எதிரே வந்த அரசு பஸ் டூவீலர் மீது மோதியது. இதில் புகழேந்தி மீது பஸ் சக்கரம் ஏறியதில் 2 கால்களும் நசுங்கின. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். இதுபற்றி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>