ஜனாதிபதி வருகையையொட்டி நீலகிரியில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

ஊட்டி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று காலை 11.40 மணிக்கு கோவையில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி  தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்திற்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம்  தாவரவியல் பூங்காவில் உள்ள ராஜ்பவன் மாளிகை செல்கிறார். நாளை 4ம் தேதி  9.50 மணிக்கு ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ  மையத்திற்கு செல்கிறார். 12 மணி வரை அங்குள்ள ராணுவ பயிற்சி கல்லூரி  அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார்.  

12  மணிக்கு மீண்டும் ஊட்டி ராஜ்பவன் மாளிகை திரும்பி ஓய்வு எடுக்கிறார். மேலும், சில சுற்றுலா தலங்களுக்கு செல்வதாகவும் கூறப்படுகிறது.  6ம் தேதி 10.50 மணிக்கு  ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இருந்து கார் மூலம் தீட்டுக்கல் ஹெலிகாப்டர்  தளத்திற்கு சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை சூலூர் விமான  நிலையத்திற்கு செல்வார். அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்ல உள்ளார். உடன் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும் வருகிறார்.

இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவை சரக டிஐஜி முத்துசாமி தலைமையில் 1250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  ஜனாதிபதி வருகையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் விடுதிகளில் தங்கியுள்ளவர்கள் குறித்த விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. நீலகிரி வரும் அனைத்து வாகனங்களும் சோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

Related Stories: