ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: 4 கார்கள், 3 பைக் எரிந்து நாசம்; 2 மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

சென்னை: வேளச்சேரி அடுத்த மேடவாக்கத்தில் நேற்று அதிகாலை ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டில் சரமாரியாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அதில், வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த விலை உயர்ந்த 4 கார்கள், 3 பைக் தீப்பற்றி எரிந்து நாசமானது. இந்த செயலில் ஈடுபட்ட 2 மர்ம நபர்களை போலீசார் சிசிடிவி கேமரா உதவியுடன் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மேடவாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். சென்னை வேளச்சேரி அருகே மேடவாக்கம், டாக்டர் விமலா நகர், 3-வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் கவுதம் (32). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன் தினம் சாப்பிட்டுவிட்டு தன் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டு இருந்தார். மேலும், வீட்டு வளாகத்தில் மிகவும் பாதுகாப்பாக 4 விலையுயர்ந்த சொகுசு கார்கள் மற்றும் 3 பைக்குகளை நிறுத்தி வைத்திருந்தார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணியளவில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இதனால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மற்றம் அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து வெளியே வந்தனர். அப்போது, கவுதம் தன் வீட்டில் நிறுத்தி வைத்திருந்த 4 கார்கள் மற்றும் 3 பைக்குகள் தீப்பற்றி எரிவதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார். மேலும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கார்களில் பற்றிய தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால், தீ கொளுந்துவிட்டு எரிந்தது. இதுகுறித்து, மேடவாக்கம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேடவாக்கம் மற்றும் அசோக்நகர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, வாகனங்களில் பற்றிய தீயை அணைக்க முயற்சித்தனர், அதற்குள் அனைத்து வாகனங்களும் முற்றிலும் தீயில் எரிந்து நாசமாகின.

இப்புகாரின்பேரில், பள்ளிக்கரணை போலீசார் தடவியல் நிபுணர்களுடன் சம்பவம் இடத்திற்கு சென்று பெட்ரோல் குண்டு வீசி கார், பைக்குகளை எரித்தனரா? அல்லது மின்கசிவால் கார், பைக்குகள் எரிந்தனவா? அல்லது யாராவது தீ வைத்துவிட்டு தப்பி ஓடினார்களா? வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து கண்டறிய பக்கத்து வீட்டின் முன் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், அதிகாலையில்  2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து செல்வது பதிவாகி உள்ளது. அவர்கள் யார் என விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவம் மேடவாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>