அசாம் உடனான எல்லை பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: மிசோரம் முதல்வர் அறிவிப்பு

அய்ஸ்வால்: எல்லை பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண, அசாம் - மிசோரம் முதல்வர்கள் முடிவு செய்துள்ளனர். அசாம் - மிசோரம் மாநிலங்களுக்கு இடையே எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. கடந்த 26ம் தேதி  எல்லையில் இரு மாநில போலீசாருக்கு இடையே மோதல் வெடித்தது. இதில், அசாமை சேர்ந்த 6 போலீசார் உட்பட 7 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இது தொடர்பாக இரு மாநில முதல்வர்களும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இந்நிலையில், இந்த வன்முறை தொடர்பாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, போலீஸ் அதிகாரிகள் மற்றும் அடையாளம் தெரியாத 200 பேர் மீது மிசோரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கொலை முயற்சி, கிரிமினல் சதி, தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், அசாம் முதல்வர் மீதான வழக்கை திரும்ப பெறுவதற்கு தயாராக இருப்பதாக மிசோரம் அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மிசோரம் தலைமை செயலாளர் லல்னன்மாவியா சாங்கோ கூறுகையில், ‘‘வழக்கு பதிவு செய்த போலீஸ் அதிகாரிகளுடன் இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும். அசாம் முதல்வருக்கு தொடர்பு இல்லாதபட்சத்தில் முதல் தகவல் விசாரணை அறிக்கையில் இருந்து அவரது பெயரை நீக்குவதற்கு விரும்புகிறோம். அசாம் முதல்வரின் மீது குற்ற வழக்கு பதிந்து இருப்பது குறித்து மிசோரம் முதல்வருக்கு தெரியாது. எனக்கும் இந்த விவகாரம் முதலில் தெரியாது. ஊடகங்கள் மூலமாகதான் தெரியவந்தது,” என்றார்.

இந்நிலையில், எல்லையில் ஏற்பட்ட மோதல் விவகாரம் தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மிசோரம் முதல்வர் சோரம் தங்காவுடன் தொலைபேசி மூலமாக பேசினார். பின்னர், சோரம்தங்கா கூறுகையில், ‘‘அசாம் முதல்வரும், நானும் பேச்சுவார்த்தை மூலமாக எல்லை பிரச்னையை தீர்த்துக் கொள்ள சம்மதித்துள்ளோம்,’’ என்றார்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப் போவதாக மிசோரம் முதல்வர் சோரம்தங்கா கூறியுள்ள நிலையில், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று அளித்த பேட்டியில், ‘‘என் மீது வழக்கு தொடர்வதால் எல்லை பிரச்னை தீர்ந்துவிடும் என்றால் எந்த காவல் நிலையத்தில் வேண்டுமானாலும் விசாரணைக்கு ஆஜராக தயாராக இருக்கிறேன். எல்லை பிரச்னை தொடர்பாக விரைவில் உச்ச நீதிமன்றத்தை அணுக இருக்கிறோம்,” என்றார்.

செயற்கைக்கோள் மூலம் எல்லைகள் வரையறை

ஒன்றிய உள்துறையை சேர்ந்த பெயர் கூற விரும்பாத அதிகாரிகள் நேற்று கூறுகையில், ‘‘வடகிழக்கு மாநிலங்களின் எல்லை பிரச்னைக்கு தீர்வு காண, செயற்கைக்கோள் மூலமாக இந்த மாநிலங்களின் எல்லைகள் வரையறை செய்யப்படும்,’’ என்றனர். வடகிழக்கு மாநிலங்களின் எல்லைகள்,  காடுகளை வரைப்படமாக்குவதற்கும், மாநிலங்களின் எல்லைகளை அறிவியல் ரீதியாக வரையறுப்பதற்கும் செயற்கைக்கோளை பயன்படுத்தலாம் என்ற திட்டம், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் சில  மாதங்களுக்கு முன் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: