பேஸ்புக் பழக்கத்தில் சிக்கிய ரியல் எஸ்டேட் அதிபரிடம் பல லட்சம் சுருட்டல்: தூத்துக்குடி அழகி கணவருடன் கைது

கும்பகோணம்: திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகா கண்டியூரை சேர்ந்தவர் சரவண பார்த்திபன் (51). ரியல் எஸ்டேட் அதிபர். இவருக்கும், தூத்துக்குடி கதிர்வேல் நகரை சேர்ந்த பார்த்திபன் மனைவி ஜனனி(25) என்பவருக்கும் பேஸ்புக் மூலம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டது. அவரது படத்தை பார்த்து அழகில் மயங்கி  ஜனனி கேட்டபோதெல்லாம் சரவணபார்த்திபன் பணம் அனுப்பி வந்தார். இதனால் அவரிடம் பெரும் தொகையை கறக்க திட்டமிட்டு போனில் பேசிய ஜனனி, பக்கத்து வீட்டு இளம்பெண் தன்னுடன் இருப்பதாகவும், அவரிடம் பேசும்படியும் கூறியுள்ளார். ஆனால், ஜனனியே குரலை மாற்றி பேசி வந்துள்ளார். அவர் சொன்ன வங்கி கணக்கிலும் சரவண பார்த்திபன் பணம் செலுத்தி வந்துள்ளார். இதேபோல் அவர் குரலை மாற்றி மாற்றி பேசி வந்துள்ளார்.

இந்நிலையில், சரவண பார்த்திபனிடம் போனில் பேசிய ஜனனி, உனது தொந்தரவு தாங்காமல் பக்கத்து வீட்டு இளம்பெண் தற்கொலைக்கு முயன்று உள்ளார். அவரை நான் காப்பாற்றி உள்ளேன். அவரை போலீசில் புகார் கொடுக்க வேண்டாம் என தடுத்து நிறுத்தி உள்ளேன். எனவே அவருக்கு ஒரு கணிசமான தொகையை கொடுத்து சரிகட்டி விடலாம் என கூறியுள்ளார். இந்நிலையில் தனது கணவரான பார்த்திபனை, இன்ஸ்பெக்டர் போல நடிக்க சொல்லி கும்பகோணத்துக்கு நேற்றுமுன்தினம் ஜனனி அனுப்பினார். பணம் பெறுவதற்காக பார்த்திபன் கும்பகோணம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ளே லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். பின்னர் சரவண பார்த்திபனுக்கு போன் செய்து மிரட்டினார்.

 சந்தேகம் அடைந்த சரவண பார்த்திபன், தனது நண்பர்களான வழக்கறிஞர்கள் வீரா, மனோகர் உள்ளிட்டோருடன் சென்று பார்த்திபனிடம் பேசினார். பீதியடைந்த அவர், தனது மனைவி ஜனனி பல லட்சம் சுருட்டிய விவரத்தை தெரிவித்துள்ளார். அவரை லாட்ஜ் அறையில் அடைத்து வைத்துவிட்டு, ஜனனியை தொடர்புகொண்டு இதுவரை என்னிடம் பறித்த பணத்தை கொடுத்தால் கணவரை விடுவிப்போம் என மிரட்டியுள்ளார். இதையடுத்து ஜனனி நேற்று முன்தினம் கும்பகோணம் வந்து மேற்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் லாட்ஜிக்கு சென்று பார்த்திபனை மீட்டதுடன், சரவண பார்த்திபன் உள்ளிட்டோரை பிடித்து விசாரித்தபோது மோசடி விவரங்கள் தெரிய வந்தது. இதுபற்றி ஜனனி அளித்த புகாரின் பேரில் சரவண பார்த்திபன், குடவாசல் குருசாமி, தஞ்சை நடராஜன் ஆகியோர் மீதும், அதேபோல் சரவண பார்த்திபன் அளித்த புகாரின் பேரில் ஜனனி, அவரது கணவர் பார்த்திபன்(25) ஆகியோர் மீதும் வழக்கு பதிந்து 5 பேரையும் கைது செய்தனர்.

Related Stories:

>