ஓடும் போது ஏற முயன்றதால் விபரீதம் ரயிலில் சிக்க இருந்த பெண்ணை சாதுர்யமாக காப்பாற்றிய போலீஸ்: சிசிடிவி காட்சி வைரல்

திருமலை: தெலங்கானாவில் ஓடும் ரயிலில் ஏற முயன்று கீழே விழுந்த பெண்ணை ரயில்வே போலீசார் காப்பாற்றினர். இந்த சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது. தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத் ரயில் நிலையத்தில் மும்பை செல்லும் சிறப்பு ரயில் நேற்று புறப்பட்டது. இந்நிலையில், இந்த ரயிலில் பயணம் செய்ய நசீனா பேகம் என்ற பெண் டிக்கெட் வாங்கிக் கொண்டு வந்துள்ளார். ரயில் புறப்பட்டதை பார்த்த நசீனா பேகம் ஓடும் ரயிலில் ஏற முயன்றார். அப்போது, ரயில் படியில் கால் எடுத்து வைக்க முயன்றபோது கால் தவறி பிளாட்பாரத்தில் ரயில் பெட்டி அருகே விழுந்தார்.

இதனை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் உடனடியாக பெண்ணை இழுத்து ரயில் பெட்டியில் அடிபடாதவாறு காப்பாற்றினார். மேலும், இதனை பார்த்த சக பயணிகள் ரயிலில் உள்ள செயினை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். இதன் காரணமாக 10 நிமிடம் தாமதமாக அந்த ரயில் புறப்பட்டது. ரயில்வே போலீசார் ஓடும் ரயிலில் ஏற முயன்று கால் தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய சம்பவம் அங்கிருந்த சிசிடிவி. காட்சிகளில் பதிவாகியிருந்தது. இதனை ரயில்வே போலீசார் தங்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். தற்போது, இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Related Stories:

>