எல்லை விவகாரத்தில் மிரட்டல் பேச்சு மிசோரம் எம்பி.க்கு அசாம் போலீசார் சம்மன்: டெல்லி வீட்டில் ஒட்டியதால் பரபரப்பு

புதுடெல்லி: அசாம் எல்லை விவகாரம் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மிசோரம் மாநிலங்களவை எம்பி.யான வனலால்வெனாவுக்கு அசாம் போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளனர். அசாம் - மிசோரம் மாநிலங்கள் இடையிலான எல்லை பிரச்னையில் கடந்த 26ம் தேதி மோதல் வெடித்தது. இதில், மிசோரம் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அசாம் போலீசார் 5 பேரும், பொதுமக்களில் ஒருவரும் கொல்லப்பட்டனர். இந்த பிரச்னை தொடர்பாக, மிசோரம் மாநிலத்தை சேர்ந்த ஆளும் மிசோ தேசிய முன்னணி கட்சியின்  மாநிலங்களவை எம்பி.யான வன்லால்வெனா, அசாம் போலீஸ் அதிகாரிகள், அரசு உயரதிகாரிகளுக்கு  மிரட்டல் விடும் வகையில் பேசினார்.

இது தொடர்பான விசாரணைக்கு நாளை ஆஜராகும்படி அசாம் போலீசார் அவருக்கு அதிரடியாக சம்மன் கொடுத்துள்ளனர். இதற்காக டெல்லி விரைந்த அசாம் சிஐடி போலீசார் குழு, வன்லால்வெனாவை தேடியது. அவர் கிடைக்காததால் மிசோரம் இல்லத்தில் சம்மனை கொடுக்க முயன்றது. ஆனால், அதன் அதிகாரி அதை வாங்க மறுத்தார். இதனால், வன்லால்வெனாவின் வீட்டுக்கு சென்ற போலீசார், அவருடைய வீட்டுக் கதவில் சம்மனை ஒட்டி விட்டு சென்றனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: