55 மூட்டைகளில் 1,800 கிலோ அளவில் குடோன்களில் பதுக்கி வைத்திருந்த ரூ.20 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்:5 பேர் கைது-திருச்சியில் தனிப்படை போலீசார் அதிரடி

திருச்சி : திருச்சியில் குடோன்களில் பதுக்கி வைத்திருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை தனிப்படை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.திருச்சி மாநகர் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா, போதை மாத்திரை விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலைய போலீசாருக்கு மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து கஞ்சா வியாபாரிகள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாலக்கரை பென்சனர் தெரு, எடத்தெரு பகுதிகளில் உள்ள குடோன்களில் விற்பனைக்காக தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் தனிப்படை மற்றும் பாலக்கரை போலீசார் அந்த இடங்களில் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றை சோதனை செய்தபோது அங்கு 55 மூட்டைகளில் 1,800 கிலோ புகையிலை, போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.20 லட்சமாகும்.

இதைத் தொடர்ந்து போதை புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த திதிருவெறும்பூர் பாரதிபுரம் பூமிநாதன்(38), திருச்சி பாலக்கரை காஜாபேட்டை புதுத்தெரு இளங்கோ(28), பென்சனர் தெரு வடிவேல்(40), காஜாபேட்டை புதுத்தெரு ஹரிஹரன், அரியமங்கலம் சீனிவாச நகர் பழனிகுமார்(35) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 1 லோடு ஆட்டோ, 4 பைக்குகள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேர் மீது கோட்பா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். போதை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்தவர்களை கைது செய்த தனிப்படை போலீசாரை மாநகர கமிஷனர் அருண் வெகுவாக பாராட்டினார்.

போலீஸ் கமிஷனருக்கு பொதுமக்கள் பாராட்டு

இளைஞர்களின் எதிர்காலம் போதை பொருட்களால் நாசமாவதை தடுப்பதற்காக மாநகர கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் மாநகரில் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதில் கடந்த சில நாட்களுக்கு முன் போதை மாத்திரைகள், ஊசி ஆகியவற்றை விற்ற 8 பேரை கைது செய்தனர். மேலும் காரில் கடத்தி வருவதை தெரிந்து விரட்டி பிடித்தபோது தனிப்படை ஏட்டு காயமடைந்தாலும் துணிந்து காரில் தொங்கியபடி சென்று 21 கிலோ கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்தார். அதுபோல் தற்போது ரூ.20 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுத்த மாநகர போலீஸ் கமிஷனர் அருணை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

வியாபாரிகளுக்கு எச்சரிக்கை

மாநகரில் வியாபாரிகள் தடை செய்யப்பட்ட புகையிலை போதை வஸ்துக்கள், போதை மாத்திரைகள் ஆகியவற்றை பதுக்கி வைத்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர கமிஷனர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: