பிரபல பிரியாணி கடையில் ரூ.11.88 லட்சம் கொள்ளை: சூபர்வைசர் உட்பட 6 பேர் கைது

பெரம்பூர்: சென்னையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் வசூலாகும் பணத்தை சூபர்வைசர் சுரேந்திரன் (35), வசூல் செய்து மண்ணடி தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் மாலை பெரம்பூரில் உள்ள கடையில் பணத்தை வாங்கிக்கொண்டு வியாசர்பாடி ஸ்டீபன்சன் சாலை வழியாக சென்றபோது, பைக்கில் வந்த 5 பேர் இவரை தாக்கி, ரூ.11.88 லட்சத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து சுரேந்திரன் வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் விசாரணையில், அதே பிரியாணி கடையில் வேலை செய்யும் கொளத்தூரை சேர்ந்த பிரகாஷ் (26), நண்பர்களுடன் சேர்ந்து பணம் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரித்தபோது, கலெக்சன் பணத்தை சூபர்வைசர் சுரேந்தர் அபேஸ் செய்ய திட்டமிட்டு, பிரகாஷ் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளை நாடகமாடியது தெரிந்தது.

இதனையடுத்து சுரேந்தர், பிரகாஷ், அவரது நண்பர்களான வேலாயுதம் (26), பிரகாஷ் (26), தமிழ்ச்செல்வன் (27), நிர்மல்குமார் (30) ஆகியோரை கைது செய்தனர். சுரேந்தரிடம் இருந்து பணம் பறித்து தப்பியபோது, அவர்களில் ஒருவரின் செல்போன் தவறி விழுந்தது. அதை மீட்டு போலீசார் சோதனை செய்தபோது, பிரகாஷ் மற்றும் சுரேந்தர் எண்கள் இருந்தன. அதன்மூலம் அனைவரும் சிக்கினர்.

Related Stories:

>