கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவர் கொன்று புதைப்பு ஒரு மாதத்துக்கு பிறகு சடலம் தோண்டியெடுப்பு: மனைவி உட்பட 3 பேர் கைது

ஸ்ரீபெரும்புதூர்: கள்ளக்காதல் விவகாரத்தில், மனைவியால் கொல்லப்பட்ட கணவனின் சடலத்தை ஒரு மாதத்துக்கு பிறகு தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் அடுத்த சிவபுரத்தை சேர்ந்தவர் அன்பழகன் (53). இவர் சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றினார். இவரின் மனைவி ஷோபனா (30). இவர்களுக்கு அன்புக்கரசி (10), கோவேஷ் (2) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த மாதம் 22ம் தேதி முதல் அன்பழகனை காணவில்லை. இது குறித்து அவரது மனைவி ஷோபனா சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் 10 நாள்களுக்குப் பிறகு குழந்தைகளுடன் ஷோபனாவும் மாயமானார்.

இதையடுத்து அன்பழகன் உறவினர்கள் அவரை கண்டுபிடிக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சுங்குவார்சத்திரம் போலீசார் இந்த வழக்கை விசாரித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அரக்கோணத்தில் உள்ள லாட்ஜில் ஷோபனா தங்கியிருப்பது தெரியவந்தது. லாட்ஜுக்கு போலீசார் சென்றபோது ஷோபனா தர்மராஜ் என்பவருடன் தங்கியிருந்தார். இரண்டு பேரையும் விசாரிக்கும்போது திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. அன்பழகனை, ஷோபனா, தர்மராஜ், தர்மராஜின் நண்பன் விக்னேஷ் (23) ஆகியோர் சேர்ந்து கடந்த 22ம் தேதி கொலை செய்து வீட்டுக்குப்பின்புறம் உள்ள கூவம் ஆற்றுப்படுகையில் புதைத்தது தெரியவந்தது. 3 பேரையும் கைது செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

மேலும் விசாரணையில் போலீசார் கூறியதாவது: திருவள்ளூர் மாவட்டம் தொழூவூர் பகுதியை சேர்ந்த தாரா என்பவருக்கும் அன்பழகனுக்கும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு மாதவன் என்ற மகன் உள்ளான். இந்நிலையில் தாராவுக்கு உடல்நிலை சரியில்லாததால் கணவனை பிரிந்து மணவாளன் நகரில் மகனுடன் வசித்து வருகிறார். முதல் மனைவியின் அனுமதியுடன் சிவபுரம் பகுதியை சேரந்த ஷோபனாவை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அன்பழகன் திருமணம் செய்தார்.

அன்பழகன், ஆவடியை அடுத்த கோணாம்பேடு பகுதியில் வீடு கட்டி மனைவி குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு அன்பழகனோட தாய் முனியம்மாள் இறந்தார். அதன் பிறகு சிவபுரத்துக்கு வந்து தாயின் இறுதி கடமைகளை அன்பழகன் செய்தார். அப்போது கொரோனா லாக் டவுன் நடைமுறைக்கு வந்ததால் சிவபுரத்தில் மனைவி குழந்தைகளுடன் தங்கியிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த எலக்ட்ரீஷியன் தர்மராஜூவுக்கும் ஷோபனாவுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இது கள்ளக்காதலாக மாறியது. இதனால் தர்மராஜ் அடிக்கடி வீட்டுக்கு வரத்தொடங்கியுள்ளான். இது அன்பழகனுக்கு தெரியவந்து மனைவியை கண்டித்தார்.

இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தர்மராஜுவை வீட்டுக்கு வரக்கூடாது என்று அன்பழகன் கூறியுள்ளார். இதனால் தர்மராஜும் ஷோபனாவும் அன்பழகனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். கடந்த 22ம் தேதி இரவு வழக்கம்போல் வீட்டுக்கு வெளியே அன்பழகன் கட்டிலில் படித்திருந்த போது தர்மராஜ் அன்பழகனை கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்து சடலத்தை வீட்டின் பின்புறம் கூவம் ஆற்றுப்படுகையில் புதைத்து தெரிந்தது. இதையடுத்து போலீசார் செங்கல்பட்டு மருத்துவமனையில் டாக்டரை வரவழைத்து அன்பழகனில் சடலத்தை தோண்டி எடுத்து அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர். இதனல் அப்பகுதி மக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

* நடவடிக்கை இல்லை

ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டத்தில் உள்ள காவல்  நிலையங்களில் ஆண், பெண் காணாமல் போவது குறித்த புகார்கள் மீதான உடனடியான நடவடிக்கை  எடுப்பது கிடையாது  என்ற புகார் பரவலாக உள்ளது. புகார் கொடுத்தவர்கள் காவல் நிலையம் சென்று தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தால் மட்டுமே அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

* கொலையாளிகள் மீது தாக்குதல்

கொலை செய்த 2 பேரையும் போலீசார் அழைத்து சென்று வேனில் ஏற்றும் போது அப்பகுதி மக்கள் அவர்களை சரமாரியாக அடிக்க ஆரம்பித்தனர். போலீசார் அதை தடுத்தனர். இதனால் அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Related Stories: