மகளிர் பேட்மின்டன் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பி.வி. சிந்து

டோக்கியோ: ஒலிம்பிக் மகளிர் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட, இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பி.வி.சிந்து தகுதி பெற்றார். லீக் சுற்றில் ஜே பிரிவில் இடம் பெற்ற சிந்து தனது முதல் போட்டியில் இஸ்ரேலின் செனியா பொலிகர்போவாவை வீழ்த்தி அசத்தினார். அடுத்து 2வது போட்டியில் ஹாங்காங் வீராங்கனை கியான் யி செயுங்குடன் நேற்று மோதிய அவர், அதிரடியாக 21-9 என்ற புள்ளிக் கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் கியான் கடும் நெருக்கடி கொடுத்தாலும், உறுதியுடன் விளையாடி 21-9, 21-16 என்ற நேர் செட்களில் வென்று ஜே பிரிவில் முதலிடம் பிடித்ததுடன் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

சாய் பிரனீத் ஏமாற்றம்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்திய வீரர் சாய் பிரனீத் தனது 2வது போட்டியில் நெதர்லாந்தின் மார்க் கால்ஜூவுடன் நேற்று மோதினார். தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய பிரனீத் புள்ளிகளைக் குவித்து முன்னேறினாலும், விடாப்பிடியாக துரத்திப் பிடித்த மார்க் 21-14, 21-14 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். தொடர்ச்சியாக 2 தோல்விகளை சந்தித்த பிரனீத் டோக்கியோ ஒலிம்பிக்சில் இருந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

மொமோடோ அதிர்ச்சி: ஆண்கள் ஒற்றையர் ஏ பிரிவில் களமிறங்கிய உலகின் நம்பர் 1 வீரரும் உள்ளூர் நட்சத்திரமுமான கென்டோ மொமோடோ 15-21, 19-21 என்ற நேர் செட்களில் தென் கொரியாவின் ஹியோ வாங்கீயிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். ஏற்கனவே மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் நட்சத்திர வீராங்கனை நவோமி ஒசாகா வெளியேறிய நிலையில், பேட்மின்டனிலும் மொமோடாவின் தோல்வியால் பதக்க நம்பிக்கை தகர்ந்தது ஜப்பான் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.

Related Stories: