விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக நாடாளுமன்றத்துக்கு டிராக்டரில் வந்த ராகுல்: இரு அவைகளும் கடும் அமளியால் மீண்டும் ஒத்திவைப்பு

புதுடெல்லி: விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்துக்கு நேற்று டிராக்டரில் வந்ததால் பரபரப்பு நிலவியது. நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் கடந்த  19ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் பெகாசஸ் செல்போன் ஒட்டு கேட்பு விவகாரம், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடங்கிய நாள்முதல் தொடர்ந்து ஒத்தி  வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வார விடுமுறைக்குப் பிறகு இரு அவைகளும் நேற்று மீண்டும் கூடின. அப்போது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது வீட்டிலிருந்து நாடாளுமன்றத்திற்கு டிராக்டரை ஓட்டி வந்தார். ஒன்றிய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ராகுல் இவ்வாறு டிராக்டரில் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், ``3 தொழிலதிபர்களை மட்டுமே இலக்காக கொண்டு இந்த புதிய வேளாண் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த சட்டங்கள் யாருக்காக கொண்டு வரப்பட்டவை என்று மக்கள் அறிவார்கள். இவை விவசாயிகளின் நலனுக்காக கொண்டு வரப்பட்டது அல்ல. எனவே ஒன்றிய அரசு இவற்றை திரும்ப பெற வேண்டும்,’’ என்று கூறினார். மாநிலங்களவை தொடங்கியதும் கார்கில் வெற்றி நாளையொட்டி போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு, ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி, அமளியில் ஈடுபட்டனர். பெகாசஸ் செல்போன் ஒட்டு கேட்பு விவகாரத்தில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டுமென கோஷமிட்டனர். இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர், அவை மீண்டும் கூடிய போதும் உறுப்பினர்கள் அமளி தொடர்ந்ததால், அவை பிற்பகல் 2 மற்றும் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இவ்வாறாக மாநிலங்களவை 5 முறை ஒத்திவைக்கப்பட்டு, பிறகு நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. இதே போல மக்களவை கூடியதும், கார்கில் போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. ஒலிம்பிக் பளு தூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மீராபாய்க்கு சபாநாயகர் ஓம் பிர்லா பாராட்டு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பெகாசஸ் மற்றும் வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி செய்தனர். பல முறை அவை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

7 மணி நேரத்திற்கு பின்னர் விடுவிப்பு

 காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்  காந்தியுடன், கட்சியின் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, இளைஞர் காங்கிரஸ் தேசிய தலைவர் னிவாஸ், எம்பி.க்கள் பிரதாப் சிங் பஜ்வா, ரன்வீத் சிங் பிட்டு மற்றும் தீபிந்தர்  சிங் ஹூடா ஆகியோர் டிராக்டரில் பேரணியாக வந்தனர். உயர் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நாடாளுமன்ற பகுதியில் டிராக்டரில் வந்தது தொடர்பாக ரன்தீப் சுர்ஜிவாலா, னிவாஸ் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 7 மணி நேரம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். ராகுல் காந்தி டிராக்டர் வந்தது சட்ட மீறல் என டெல்லி போலீசார் கூறி உள்ளனர்.

Related Stories:

>