செல்போனை படிப்புக்காக 10% பேரே பயன்படுத்துகின்றனர்: ஆய்வில் தகவல்

புதுடெல்லி: கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், வகுப்பறை கல்விக்கு பதிலாக ஆன்லைன் கல்வி முறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்நிலையில், செல்போன்களின் பயன்பாடு மாணவர்களின் கல்வியை பாதித்துள்ளதாக தேசிய குழந்தைகள் நல ஆணையம் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வானது 6 மாநிலங்களில் உள்ள 60 பள்ளிகளை சேர்ந்த 3,491 மாணவர்கள் (50.9 சதவீத ஆண் குழந்தை, 49.1 பெண் குழந்தை), 1,534 பெற்றோர்கள் மற்றும் 786 ஆசிரியர்கள் என மொத்தம் 5,811 பேரிடம் இந்த ஆய்வானது எடுக்கப்பட்டுள்ளது.

இதில் 10.10  சதவீத மாணவர்கள் மட்டுமே செல்போனை படிப்பு சார்ந்த விஷயங்களுக்கு உபயோகிப்பதும், மீதமுள்ளவர்களில் 52.90 சதவீதம் பேர் வாட்ஸ்ஆப், முகநூல் உபயோகிக்கவும், 31.90 சதவீத மாணவர்கள் விளையாடுவதற்கும், 44.10 மாணவர்கள் பாட்டு கேட்பதற்கும், 3.50 சதவீத மாணவர்கள் வீடியோ பார்ப்பதற்கும் உபயோகிப்பது தெரியவந்துள்ளது. மேலும், 42.90 சதவீத மாணவர்களிடம் சமூக ஊடகங்களில் கண க்கு உள்ளது அதிர்ச்சி அளிக்கும் தகவலாகவுள்ளது. அதில் 36.8 சதவீத மாணவர்களுக்கு பேஸ்புக்கிலும், 45.50 சதவீத மாணவர்களுக்கு இன்ஸ்டாகிராமிலும் கணக்கு உள்ளது. செல்போன் பயன்பாட்டு மூலம் 37.15 சதவீத மாணவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Stories: