நிற்கக்கூடாது...100% அமர்ந்து செல்ல மட்டுமே அனுமதி!: டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்..!!

டெல்லி: டெல்லியில் மெட்ரோ ரயிலில் இன்று முதல் அமர்ந்து மட்டுமே செல்ல பயணிகள் அனுமதிக்கப்படுவதால் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தலைநகர் டெல்லியில் இன்று முதல் மெட்ரோ ரயிலில் நின்றபடி பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அமர்ந்து மட்டுமே பயணிக்க வேண்டும் என்பதால் குறைந்த அளவில் மட்டுமே மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் டெல்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் கூட்டம் அலைபோதுகிறது. தங்களது முறைக்காக பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இதுகுறித்து அங்குள்ள பயணி ஒருவர் தெரிவித்ததாவது, அடுத்த ரயில் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியவில்லை. கீழே சென்று கேட்டாலும் மெட்ரோ ஊழியர்களும் பதில் தர மறுக்கின்றனர். ரயிலில் ஏற நீண்ட வரிசை காணப்படுகிறது. அனைவரும் காத்து கிடக்கின்றோம். அனைத்து பயணிகளும் அவதிக்கு ஆளாகி உள்ளோம் என்று குறிப்பிட்டார். மற்றொரு பயணி கூறியதாவது, மெட்ரோ ரயிலில் அமர்ந்து மட்டுமே பயணிக்க வேண்டும் என்ற அறிவிப்பை வரவேற்கின்றோம். அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நாம் மதித்து செயல்பட வேண்டும்.

பெருந்தொற்றில் இருந்து கடும் போராட்டத்திற்கு பிறகு மீண்டிருக்கின்றோம். இதுபோன்ற கட்டுப்பாடுகள் மக்கள் நன்மைக்கு தான் என்பதை நாம் உணர வேண்டும் என்று கூறினார். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மெட்ரோ ரயிலில் நின்று கொண்டு பயணிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதை பெரும்பாலான பயணிகள் வரவேற்றுள்ளனர். நீண்ட நேரம் ரயில் நிலையத்தில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் டெல்லியில் இன்று காலை ஏற்பட்ட மிதமான நில அதிர்வு எதிரொலியாக குறைந்த அளவிலேயே ரயில்கள் இயக்கப்படுவதே பயணிகள் கூட்டத்திற்கு காரணம் என்று தெரிவித்துள்ள மெட்ரோ நிர்வாகம் படிப்படியாக ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருவதாக விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: