105 வயதில் 4ம் வகுப்பில் பாஸ் 107 வயது மாணவி கேரளாவில் மரணம்

திருவனந்தபுரம்: கேரளாவில்   தனது 105வது வயதில் 4ம் வகுப்பு தேர்வு எழுதி ஆச்சரியத்தை ஏற்படுத்திய  மூதாட்டி  நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.  கேரள மாநிலம், கொல்லம் அருகே உள்ள   பிராக்குளம் பகுதியை சேர்ந்தவர் பாகீரதியம்மா (107). இவர் கடந்த 2019ம்   ஆண்டு தனது 105வது வயதில் கேரள எழுத்தறிவு இயக்கம் நடத்தும் 4ம் வகுப்பு தகுதி தேர்வு எழுதினார். இதில், 275 மதிப்பெண்களுக்கு 205 மதிப்பெண் பெற்று   வெற்றி பெற்றார். உலகிலேயே 105வது வயதில் இந்த தேர்வு எழுதியவர் என்ற சாதனையை படைத்தார். இவருக்கு ஒன்றிய அரசின் ‘நாரிசக்தி விருது’   வழங்கப்பட்டது. பிரதமர் மோடியும் தனது மன்கி பாத் நிகழ்ச்சியில் இவரை பாராட்டி பேசினார்.

வயது மூப்பு காரணமாக வீட்டில் இருந்த பாகீரதியம்மா, நேற்று  முன்தினம் நள்ளிரவு 11.55 மணியளவில்  மரணம் அடைந்தார். அவரது உடல் வீட்டு   தோட்டத்தில் ேநற்று மதியம் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. கொல்லம்  பிராக்குளத்தில் 1914ம் ஆண்டு இவர் பிறந்தார். 9வது வயதிலேயே பள்ளி படிப்பை   கைவிட்டார். பின்னர், கேரள எழுத்தறிவு இயக்கம் நடத்திய வகுப்பில் சேர்ந்து   படித்து 4ம் வகுப்பு தகுதி தேர்வில் வெற்றி பெற்றார். இது அனைவரின்   கவனத்தையும் ஈர்த்தது.

Related Stories: