சுகாதாரத்துறை உத்தரவை தொடர்ந்து குட்கா, பான்மசாலா வேட்டை தொடங்கியது: கடைகள், வாகனங்களில் போலீஸ் தீவிர சோதனை

சென்னை: சென்னையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போன்ற போதை பொருட்கள் கடந்த அதிமுக ஆட்சியில் கடைகளில் தடையின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதையடுத்து, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகம் முழுவதும் 2 அல்லது 3 மாதங்களில் குட்கா மற்றும் பான்மசாலா விற்பனை மற்றும் கடத்தலை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதைதொடர்ந்து சென்னை மாநகர காவல் எல்லையில் உள்ள பகுதிகளில் குட்கா, பான்மசாலா போன்ற போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அனைத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.அந்த உத்தரவை தொடர்ந்து சென்னை மாநகரம் முழுவதும் அந்தந்த காவல் எல்லைகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிமாநிலங்களில் இருந்து லாரிகள் மற்றும் கார்களில் தான் அதிகளவில் குட்கா மற்றும் பான்மசாலா பொருட்களை கடத்தி வருகின்றனர். இதனால் அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் கார்களை மடக்கி போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

 இதுதவிர சுகாதாரத்துறை அதிகாரிகள் தலைமையில் குட்கா மற்றும் பான்மசாலா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி குட்கா பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். ஒவ்வொரு காவல் எல்லையில் உள்ள வியாபாரிகள் சங்க உறுப்பினர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து அந்தந்த பகுதி இன்ஸ்பெக்டர்கள் குட்கா பொருட்கள் விற்பனை செய்ய கூடாது என்றும், இதனால் நோய் தொற்று அதிகரிக்கும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதையும் மீறி குட்கா மற்றும் பான்மசாலா பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து கடைக்கு சீல் வைக்கப்படும் என்றும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக சென்னை மாநகரம் முழுவதும் நேற்று முதல் குட்கா மற்றும் பான்மசாலா பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்குள் நுழைவும் பகுதிகளில் போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 சைதாப்பேட்டை மேற்கு ஜான்ஸ் சாலையில் சைதாப்பேட்டை உதவி ஆய்வாளர் செல்வகுமார், தலைமை காலவர் வெங்கடேசன், காவலர் சண்முகம் ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த டாடா ஏசி வாகனத்தை வழிமறித்து சோதனை செய்தனர். அதில் 345 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து குட்கா பொருட்களை கடத்தி வந்த பள்ளிக்கரனை பகுதியை சேர்ந்த மனோகரன்(42), ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த பாலமுருகன்(26), இசக்கி முத்து(26) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 345 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் மாநகரம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு பல லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

Related Stories: