புதுச்சேரி தலைமை செயலகம் எதிரே கடலில் படகுகளுடன் மீனவர்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்: போலீஸ் குவிப்பு- பதற்றம்

புதுச்சேரி: புதுச்சேரியில் சுருக்கு வலை பயன்பாட்டிற்கு தடை விதிக்கக்கோரி 18 கிராம மீனவர்கள் கடந்த 19ம்தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் விசைப்படகு, பைபர், எப்.ஆர்.பி., படகு மற்றும் கட்டுமர உரிமையாளர்கள் நேற்று காலை அவசர கூட்டம் நடத்தினர். வீராம்பட்டினம் கடற்கரையில் நடந்த இக்கூட்டத்தில் 18 கிராம மீனவர்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபடுவதென முடிவெடுத்தனர். அதன்படி புதுச்சேரியில் காந்திசிலை எதிரே கடலில் படகுகளுடன் நின்று கருப்புக் கொடியை ஏந்தியவாறு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 150க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், பைபர் படகுகள், எப்ஆர்பி, கட்டுமர படகுகளுடன் 250க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள், மீனவர்கள் அங்கு நின்றபடி போராட்டம் நடத்தினர்.

அப்போது புதுச்சேரியில் சுருக்கு வலை பயன்பாட்டிற்கு தடைவிதிக்க வேண்டுமென முழக்கங்களை எழுப்பினர். தலைமை செயலகம் முன்பு நடந்த போராட்டம் காரணமாக அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இதையொட்டி அசம்பாவிதம் தடுக்க கிழக்கு எஸ்பி ரக்சனாசிங் தலைமையில் தலைமை செயலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதுகுறித்து பைபர் படகு உரிமையாளர்களிடம் கேட்டபோது, புதுச்சேரியில் சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அரசு அனுமதிக்கக் கூடாது. இதனால் மீனவர்களிடையே பிளவு ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழல் உருவாகும் என்றனர். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: