டோக்கியோவுக்கு டிக்கெட் போட்டாச்சு...ஜோகோவிச் உற்சாகம்

பெல்கிரேடு: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதை உலகின் நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் உறுதி செய்துள்ளார். சமீபத்தில் நடந்த விம்பிள்டன் தொடரில் தனது 20வது கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி பெடரர், நடால் சாதனையை சமன் செய்த ஜோகோவிச் (34 வயது), டோக்கியோ ஒலிம்பிக்சில் பங்கேற்க 50-50 வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தார். இதனால் ஒலிம்பிக்சில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது.

இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் என 3 கிராண்ட் ஸ்லாம் தொடர்களிலும் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ள ஜோகோவிச், ஒலிம்பிக்ஸ் மற்றும் யுஎஸ் ஓபனிலும் பட்டம் வென்றால் ‘கோல்டன் ஸ்லாம்’ சாதனையை நிகழ்த்தும் முதல் வீரர் என்ற பெருமையை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.  இது வரை ஜெர்மனி வீராங்கனை ஸ்டெபி கிராப் மட்டுமே (1988) இந்த சாதனையை வசப்படுத்தி உள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் மற்றும் காயம் காரணமாக பெடரர், நடால், ஜோகன்னா கோன்டா, ஏஞ்சலிக் கெர்பர் உள்பட முன்னணி வீரர், வீராங்கனைகள் பலர் டோக்கியோ ஒலிம்பிக்சில் இருந்து ஏற்கனவே விலகியுள்ள நிலையில், ‘டோக்கியோ செல்ல பிளைட் டிக்கெட் புக் செய்தாகிவிட்டது’ என்று நேற்று ட்வீட் செய்துள்ள ஜோகோவிச், ஒலிம்பிக்சில் தான் பங்கேற்பதை உறுதி செய்துள்ளார்.

Related Stories: