சித்தூர் அருகே பரபரப்பு விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை துவம்சம் செய்த யானைகள்-இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

சித்தூர் : சித்தூர் மாவட்டம், வி.கோட்டா மண்டலம், குப்பம்- பலமனேர் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள கும்மரமடுகு, வெங்கடேபல்லி, தானமையகாரிபல்லி, சிந்தலகுண்ட உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலத்தில் 10க்கும் மேற்பட்ட யானைகள் புகுந்து விவசாய பயிர்களை துவம்சம் செய்தது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கையில்,

எங்கள் கிராமம் அருகே வனப்பகுதி இருப்பதால் அவ்வப்போது காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்கு படையெடுத்து விவசாய பயிர்களை துவம்சம் செய்து வருகிறது. தற்போது எங்கள் சுற்றுப்புற கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் 10க்கும் மேற்பட்ட யானைகள் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள தக்காளி, கோஸ், வாழை, கரும்பு, பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்தது.

மேலும், நேற்று அதிகாலை 6 மணி அளவில் எங்கள் பகுதியை சேர்ந்த விவசாயிகள் விவசாய நிலத்துக்கு சென்று பார்த்தபோது கூட்டம் கூட்டமாக யானைகள் விவசாய நிலத்தில் உள்ள பயிர்களை நாசம் செய்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பலமனேர் வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தோம்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பலமனேர் வனத்துறை அதிகாரி பிரசாத் மற்றும் வனத்துறை ஊழியர்கள் கிராம மக்கள் உதவியுடன் பட்டாசுகள் வெடித்து, சுமார் 4 மணி நேரம் போராடி யானைகளை வனப்பகுதிக்கு விரட்டினர்.

மேலும் யானைகளால் பல ஏக்கர் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்களை சேதப்படுத்தியது. இதற்கு மாநில அரசு உடனடியாக விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

அதேபோல் எங்கள் கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு அருகே வனப்பகுதி இருப்பதால் அடிக்கடி யானைகள் விவசாய நிலத்திற்கு வந்து பயிர்களை சேதப்படுத்துகிறது. எனவே எங்கள் விவசாய நிலத்திற்கு அருகே வனத்துறை சார்பில் முள்வேலி அமைத்து விவசாயிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: