புதுகை மாவட்ட விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பத்தை கடைப்பிடித்து அதிக மகசூல் பெறலாம்-வேளாண் அதிகாரி வழிகாட்டல்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் நிலக்கடலை சாகுபடியின் போது கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் மற்றும் அதிக மகசூல் பெறுவது குறித்து வேளாண் இணை இயக்குநர் இராம.சிவகுமார் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

விதை நேர்த்தி:

நிலக்கடலையில் விதை மூலமும் மண் மூலமும் பரவும் நோய்களான வேரழுகல், தண்டழுகல் மற்றும் இலைப்புள்ளி நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஒரு கிலோ விதைக்கு கார்பாக்சின் பூஞ்சணக்கொல்லி கொண்டு விதை நேர்த்தி செய்து 24 மணி நேரம் வைத்திருந்து விதைக்க வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடர்மா விரிடி அல்லது டிரைக்கோடெர்மா ஆர்சியானம் என்ற உயிரியல் பூஞ்சணக்கொல்லி கொண்டு விதை நேர்த்தி செய்து உடன் விதைக்க வேண்டும்.

ஒரு லிட்டர் ஆறிய அரிசி வடிகஞ்சியில் ரைசோபியம் (நிலக்கடலை) மற்றும் பாஸ்போபாக்டீரியா ஆகிய நுண்ணுயிர்ப் பொட்டலங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு பொட்டலம் (200 கிராம்) எடுத்துக் கொட்டி ஒரு குச்சியைக்கொண்டு நன்கு கலக்கி விதைகளை சாக்குப் பையின் மேல் பரப்பவும். தயார் செய்த நுண்ணுயிர்களின் கலவையினை விதைகளின் மேல் ஒரு இலைக்கொத்து கொண்டு விதைகளை மேலும் கீழும் புரட்டிக் கலவை நன்கு படும்படித் தெளிக்க வேண்டும். ஒன்று முதல்2 மணி நேரம் வரை விதைகளை நிழலில் உலர்த்தி 24 மணி நேரத்திற்குள் விதைக்க வேண்டும்.

திரவ நுண்ணுயிரி:

ஒரு கிலோ விதைக்கு 10 மி.லி. ரைசோபியம் (நிலக்கடலை) மற்றும் பாஸ்போபாக்டீரியா திரவ நுண்ணுயிரி கலந்து விதை நேர்த்தி செய்தல் வேண்டும். உயிரியல் மருந்து கொண்டு விதை நேர்த்தி செய்யும் விதைகளை இரசாயனப் பூஞ்சணக்கொல்லி கொண்டு விதை நேர்த்தி செய்தல் கூடாது. நிலக்கடலை விதை நேர்த்தி செய்யும்போது விதையின் மேல்தோல் உரியாமல் கவனமாக விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதையுறையில் பாதிப்பு ஏற்படின் முளைப்புத் திறன் பாதிக்கப்படும்.

விதைப்பு:

மானாவாரியில் ஈரத்தைப் பயன்படுத்தி ஏர் மூலம் அல்லது களைக்கொத்து கொண்டு விதைக்கலாம். சீரான பயிர் எண்ணிக்கை கிடைக்க விதைப்புக் கருவி கொண்டு விதைக்கலாம். விதைக்கும்போது விதைகளை வரிசைக்கு வரிசை 30 செமீ. செடிக்கு செடி 10 செ.மீ இடைவெளியும் விட்டு நிலத்தில் 4 செ.மீ. ஆழத்திற்கு மிகாமல் விதைக்க வேண்டும். மேலும் தொழு உரம், ரசாயன உரம், உயிர் உரங்கள் ஏக்கருக்கு ஏற்ப தூவி பயன்படுத்தலாம்.

களைக்கட்டுப்பாடு:

களைக்கொல்லி தெளிக்கவில்லை எனில் விதைத்த 20ம் நாளிலும் 45ம் நாளிலும் ஆட்களை வைத்துக் களைகளை எடுக்க வேண்டும். களைக்கொல்லி தெளிக்கும்போது வயலில் ஈரம் இருப்பதும், கைத்தெளிப்பான் பயன்படுத்துகையில் தட்டை விசிறித் தெளிப்பு முனையைப் பயன்படுத்துவதும், வயலில் பின்னோக்கி நடந்து செல்வதும் இன்றியமையாதனவாகும்.

மண் அணைத்து ஜிப்சம் இடுதல்:

​நன்கு முதிர்ச்சியான பொக்கற்ற காய்களை பெறுவதற்கும், எண்ணெய் சத்து மிக்க நிலக்கடலையினை பெறுவதற்கும் 45வது நாள் களை கொத்தி ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சம் இட்டு மண் அணைக்க வேண்டும். இதனால் விழுதுகள் நன்கு மண்ணுக்குள் இறங்கி நிலக்கடலை மகசூல் கூடுதலாக கிடைக்கும். எனவே நிலக்கடலை சாகுபடியாளர்கள் மேற்கண்ட தொழில்நுட்பங்களை முறையாக கடைப்பிடித்து நிலக்கடலையில் கூடுதல் மகசூல் பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: