மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு ஆலோசனை வழங்க நிறுவனங்களுக்கு அழைப்பு.: விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும் என எதிர்பார்ப்பு

டெல்லி: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு ஆலோசனை வழங்க நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒன்றிய அரசு கடந்த 2019 ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டியது. ஆனால் மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணிகளும் நடைபெறவில்லை.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால் தென்தமிழகம் மற்றும் கேரளா மாநில மக்கள் பெரும் பயன் அடைவார்கள். மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையில் மாணவர்களுக்கு கூடுதல் ஒதுக்கீடு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. மேலும் தற்போது கொரோனா தொற்று காரணமாக பல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அளவுக்கு அதிகமாக பணம் வசூல் செய்யும் சூழலில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்திருந்தால் ஒரே நேரத்தில் பல ஆயிரம் மக்கள் சிகிச்சை பெற்று பயன்பெற்றிருப்பார்கள்.

ஆனால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாகியும் எவ்வித பணிகளும் நடைபெறவில்லை. அதனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளுக்கு ஆலோசனை வழங்க தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கான உபகரணங்களை கொள்முதல் செய்வதற்கு ஆலோசனை வழங்குவதற்கும் நிறுவனங்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் ரூ.1,977 கோடி மதிப்பீட்டில் நடைபெற உள்ளதாக ஒன்றிய அரசு ஏற்கனவே தகவல் தெரிவித்து இருந்தது. இந்தநிலையில் விரைவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையின்  கட்டுமான பணிகள் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories: