3வது டி20 போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி: ஆஸி.க்கு எதிரான தொடரை கைப்பற்றியது

செயின்ட் லூசியா: செயின்ட் லூசியாவில் நேற்று நடந்த 3வது டி20 கிரிக்கெட் போட்டியிலும் ஆஸ்திரேலியாவை, வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, தொடரை கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசில் பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் தற்போது செயின்ட் லூசியாவில் நடந்து வருகிறது. இதில் முதல் போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்திலும், 2வது போட்டியில் 56 ரன்கள் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியாவை வெஸ்ட் இண்டீஸ் அணி வீழ்த்தியது.  தொடர்ந்து இன்று நடந்த 3வது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களை எடுத்தது.

அதிகபட்சமாக கேப்டன் ஆரோன் பின்ச் 30 ரன்களும், ஹென்ரிக்ஸ் 33 ரன்களும் எடுத்தனர். 142 ரன்கள் என்ற இலக்கை 14.5 ஓவர்களில் எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. கிறிஸ் கெய்ல் 38 பந்துகளில் 67 ரன்களை குவித்து, வழக்கமான தனது அதிரடி மூலம் அணிக்கு வெற்றி தேடித் தந்தார். அவர் 7 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகளை விளாசி, ஆஸி. பந்துவீச்சை துவம்சம் செய்தார். இப்போட்டியின் ஆட்டநாயகனாக அவரே தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியுள்ளது.

Related Stories: