நாட்றம்பள்ளி, திருப்பத்தூரில் இருந்து ஆந்திரா, கர்நாடகாவுக்கு ரயிலில் கடத்திய 8 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

நாட்றம்பள்ளி : நாட்றம்பள்ளி அடுத்த சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையத்தில்  இருந்து ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினகரன் நாளிதழில் நேற்றுமுன்தினம் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று அதிகாலை மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன் தலைமையில் நாட்றம்பள்ளி தாசில்தார் மகாலட்சுமி, வட்ட வழங்கல் அலுவலர் நடராஜன் மற்றும் வருவாய் துறையினர் சோமநாயகன்பட்டி ரயில் நிலையத்தில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, ஜோலார்பேட்டையில் இருந்து கர்நாடகா நோக்கி சென்ற பாசஞ்ஜர் ரயிலை சோதனையிட்டனர். அதில் கடத்தி செல்ல ரயில்பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த 5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட 5 டன்  ரேஷன் அரிசியை நாட்றம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.  

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் பல்வேறு பகுதிகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாகவும், திருப்பத்தூர் ரோடு பகுதியில் ஒரு வீட்டின் பின்புறம் ரேஷன் அரிசி கடத்தி வைக்கப்பட்டு ஆந்திராவுக்கு கடத்த உள்ளதாகவும் நேற்று முன்தினம்  மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயனுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் திருப்பத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் கண்ணன் தலைமையில், துறை அதிகாரிகள் கருப்பனூர் சுடுகாட்டின் பின்புறம் உள்ள ஒரு வீட்டிற்கு சென்ற சோதனை செய்தனர்.

அப்போது அங்கு ஆந்திராவுக்கு கடத்த பதுக்கிவைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசி, 48 மூட்டைகளாக கட்டி வைக்கப்பட்டிருந்தது. அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் இந்த அரிசி கடத்தல் கும்பல் தலைவன் யார் என விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: