2 டோஸ் தடுப்பூசிக்கு பிறகும் பூஸ்டர் போடுவது அவசியமா?: உலக சுகாதார நிறுவனம் விளக்கம்

புதுடெல்லி: ‘இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட பிறகும் பூஸ்டர் டோஸ் தேவை என்பதற்கான எந்த ஆதாரங்களும் இப்போதைக்கு இல்லை’ என உலக சுகாதார நிறுவனம் கூறி உள்ளது.மிகவும் வீரியமிக்க டெல்டா வகை கொரோனா வைரசால் உலகம் முழுவதும் மீண்டும் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இந்தியாவில் 2வது அலையைப் போல் தற்போது இந்தோனேஷியாவில் பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே, டெல்டா வகை வைரசுக்கு எதிராக அதிக நோய் எதிர்ப்பு சக்தி பெற, 2 டோஸ் தடுப்பூசிக்கு பிறகு, ‘பூஸ்டர் டோஸ்’ அவசியம் என சில முன்னணி தடுப்பூசி மருந்து நிறுவனங்கள் கூறி வருகின்றன.  பைசர், மாடர்னா போன்ற நிறுவனங்கள் பூஸ்டர் தடுப்பூசி கண்டுபிடிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளன.இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

பூஸ்டர் தடுப்பூசி தேவையா என்பது தொடர்பாக இதுவரை எந்த ஆதாரங்களும் இல்லை. அறிவியல் என்பது தொடர்ந்து வளர்ச்சி அடையக் கூடியது.

எனவே, அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி வேண்டும் என்பதற்கு இப்போதைக்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்றாலும் கூட, இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகளில் அது குறித்த முழுமையான ஆய்வு முடிவுகள் கிடைக்கப் பெறலாம். அதே நேரம், தற்போது தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு 8, 10, 12 மாதங்கள் வரை நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது.  இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய பிறகு பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொள்வதால் அனைத்து விதமான உருமாற்ற வகை வைரஸ்களுக்கு எதிராக அதிக நோய் எதிர்ப்பு சக்தி பெறலாம் என ஒரு சில ஆய்வுகள் கூறுகின்றன. இதை உறுதிபடுத்த நமக்கு இன்னும் அதிகமான ஆய்வுகள் தேவை. அதே போல், இரு வெவ்வேறு தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்துவது தொடர்பாகவும் தொடர்ந்து ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

கோவாக்சினுக்கு அங்கீகாரம்6 வாரங்களில் முடிவு தெரியும்

சவுமியா சுவாமிநாதன் மேலும் கூறுகையில், ‘‘பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின்  தடுப்பூசி குறித்த 3ம் கட்ட பரிசோதனை முடிவுகள் தொடர்பான அனைத்து  ஆவணங்களும் உலக சுகாதார நிறுவனத்திடம் வழங்கப்பட்டு விட்டது. இதனை நிபுணர்  குழு ஆய்வு செய்து வருகிறது. எனவே இன்னும் 4 அல்லது 6 வாரத்தில் அவசரகால  அனுமதி தருவது தொடர்பான உலக சுகாதார நிறுவனத்தின் முடிவுகள்  வெளியிடப்படலாம்,’’ என்றார். இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியை உலக சுகாதார நிறுவனம் இதுவரை அங்கீகரிக்கவில்லை. இதனால் கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்கள் வெளிநாடு செல்வதில் சிக்கலை சந்திக்கும் நிலை இருப்பது குறிப்பிடத்தக்கது.

* நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்டது.

* இதில் நேற்றும் தினசரி பாதிப்பு 40 ஆயிரத்துக்கு அதிகமாக பதிவாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 42 ஆயிரத்து 766 பேர் புதிதாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 3 கோடியே 7 லட்சத்து 95 ஆயிரத்து 716 ஆக அதிகரித்துள்ளது.

* கடந்த 24 மணி நேரத்தில் 1,209 பேர் பலியாகி உள்ளனர். இதில் 738 பேர் மகாராஷ்டிராவிலும், 130 பேர் கேரளாவிலும் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 7 ஆயிரத்து 145 ஆக உள்ளது.

* 4 லட்சத்து 55 ஆயிரத்து 33 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொற்று பரவல் குறையவில்லை

உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் அளித்த பேட்டியில், ‘‘கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் சுமார் 5 லட்சம் பேர் புதிதாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,300 பேர் பலியாகி உள்ளனர். எனவே தொற்று பரவல் குறையவில்லை. ஆப்ரிக்கா நாடுகளில் பலி எண்ணிக்கை 2 வாரத்தில் 30%ல் இருந்து 40% ஆக அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக வீரியமிக்க டெல்டா வகை வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவத் தொடங்கி உள்ளது. அதோடு, தடுப்பூசி போடும் வேகம் குறைந்திருப்பது, மாஸ்க், சமூக இடைவெளி கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகள் தளர்வு ஆகியவையும் தொற்று பரவ காரணமாக உள்ளது’’ என்றார்.

நேபாளம், பூடானுக்கு அமெரிக்கா உதவி

அமெரிக்காவில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு தடுப்பூசி, மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நேபாளத்திற்கு 15 லட்சம் கொரோனா தடுப்பூசியும், பூடானுக்கு 5 லட்சம் தடுப்பூசியும் அனுப்பப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை நேற்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த வாரத்தில் மட்டும் கவுதமாலா, உருகுவே, பராகுவே, பொலிவியா, ஆப்கானிஸ்தான், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கு சுமார் 1.5 கோடி தடுப்பூசிகளை அமெரிக்கா வழங்கி உள்ளது.

Related Stories: