இமாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங் மறைவு: ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல்

சிம்லா:  இமாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வர் வீர்பத்ர சிங் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் பல்வேறு தலைவர்கள் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வீரபத்ர சிங் (87), 6 முறை இமாச்சலத்தின் முதல்வராக பதவி வகித்தவர். கடந்த திங்களன்று மாரடைப்பு காரணமாக அவர் சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து நேற்று முன்தினம் முதல் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, மாநில அரசு மூன்று நாள் துக்கம் அறிவித்துள்ளது. வீரபத்ர சிங்கின் உடல், உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் மரியாதை செலுத்துவதற்காக சிம்லாவின் ஜகுவில் உள்ள அவரது சொந்த இல்லம் மற்றும் காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று வைக்கப்படுகிறது. ராம்பூரில் நாளை பிற்பகல் 2 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட பின்னர், மாலையில்  இறுதி சடங்கு நடைபெறும்.   

வீரபத்ர சிங்கின் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாகூர் மற்றும் பாஜ தலைவர் நட்டா உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். வீரபத்ர சிங் 6 முறை முதல்வராக மட்டுமின்றி, 5 முறை எம்பி.யாகவும் இருந்துள்ளார். 9 முறை எம்எல்ஏ.வாக பதவி வகித்துள்ளார். 1998ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை எதிர்ககட்சி தலைவராக இருந்துள்ளார். 1977, 1979, 1980 மற்றும் 2012ம் ஆண்டில் இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் தலைவராக இருந்துள்ளார். அவரது மனைவி  பிரதிபாவும் முன்னாள் எம்பி.யாவார். அவரது மகன் சிம்லா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ.வாக  இருக்கிறார்.

Related Stories: