விம்பிள்டன் டென்னிஸ்; அலெக்சாண்டர் ஸ்வரெவ் அதிர்ச்சி தோல்வி: இறுதிப்போட்டி கனவு கலைந்தது

லண்டன்: விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் 4ம் சுற்றில் ஜெர்மனியின் நட்சத்திர வீரர் அலெக்சாண்டர் ஸ்வரெவ், கனடாவின் இளம் வீரர் ஆகர் அலியாசிம்மிடம் 5 செட்களில் போராடி தோல்வியடைந்தார். ஏடிபி தரவரிசையில் தற்போது 6ம் இடத்தில் உள்ள அலெக்சாண்டர் ஸ்வரெவ், கடந்த ஆண்டு யு.எஸ். ஓபனில் ஒற்றையர் பிரிவில் ரன்னர் பட்டம் வென்றார். இதையடுத்து இந்த விம்பிள்டனிலும் அவர் பைனல் வரை முன்னேறுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் நேற்று நடந்த 4ம் சுற்றுப் போட்டியில் ஏடிபி தரவரிசையில் தற்போது 19ம் இடத்தில் உள்ள கனடாவின் 20 வயதேயான இளம் வீரர் ஆகர் அலியாசிம்முடன் மோதினார்.

மிகவும் பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் முதல் செட்டை அலியாசிம் 6-4 என கைப்பற்றினார். அடுத்த செட்டில் இருவரும் சமபலத்துடன் மோதினர். இதனால் அந்த செட் டை பிரேக்கர் வரை நீடித்தது. டை பிரேக்கரில் அலியாசிம் அந்த செட்டை 7-6 என கைப்பற்றினார். முதல் 2 செட்களை இழந்தாலும் ஸ்வரெவ் மனம் தளரவில்லை. அதிரடியாக அடுத்த 2 செட்களை 6-3, 6-3 என அதிரடியாக அவர் கைப்பற்ற, போட்டியில் விறுவிறுப்பு எகிறியது. 5வது செட்டை 6-4 என அலியாசிம் கைப்பற்றி, ஸ்வரெவ்வின் பைனல் கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அடுத்து காலிறுதியில் அலியாசிம், இத்தாலியின் வளர்ந்து வரும் டென்னிஸ் நட்சத்திரம் மேட்டியோ பெரட்டினியுடன் மோதவுள்ளார்.

ஏடிபி தரவரிசையில் 2ம் இடத்தில் உள்ள ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவ், நேற்று நடந்த 4ம் சுற்றுப் போட்டியில் போலந்து வீரர் ஹியூபர்ட் ஹர்காச்சுடன் மோதினார். இதில் முதல் செட்டை 6-2 என மெட்வடேவ் கைப்பற்றினார். 2ம் செட்டை 7-6 என டைபிரேக்கரில் ஹர்காச் கைப்பற்றினார். 3ம் செட்டை மெட்வடேவ் 6-3 என வசப்படுத்திக் கொண்டார். 4ம் செட்டில் ஹர்காச்  4-3 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது, மழை குறுக்கிட்டது. அதனால் இப்போட்டி இன்று தொடரும் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீரரான ஜோகோவிச், முன்னாள் நம்பர் 1 வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ரஷ்ய வீரர் கேரன் காச்சநோவ், கனடாவின் டெனிஸ் ஷாபோவலோவ் மற்றும் ஹங்கேரியின் மார்டன் பக்சோவிக்ஸ் ஆகியோரும் 4ம் சுற்றில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கடைசி 4ம் சுற்றுப் போட்டியில் இங்கிலாந்தின் எம்மா ராடுகானும், குரோஷியாவின் டோம்ஜானோவிக்கும் மோதினர். இதில் முதல் செட்டை 4-6 என பறி கொடுத்த எம்மா, 2ம் செட்டில் 0-3 என பின்தங்கினார்.

அப்போது காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக அவர் அறிவித்தார். இதையடுத்து டோம்ஜானோவிக், காலிறுதிக்கு தகுதி பெற்றார். முன்னணி வீராங்கனைகள் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லீ பார்டி, செக். குடியரசின் வீராங்கனைகள் கரோலினா பிளிஸ்கோவா மற்றும் கரோலினா மச்சோவா, ஜெர்மனியின் ஆங்கிலிக் கெர்பர், பெலாரசின் அரைனா சபலென்கா ஆகியோரும் மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

Related Stories: