இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒன்டே இந்திய மகளிர் அணி ஆறுதல் வெற்றி: மித்தாலி ராஜ் புதிய சாதனை

வொர்செஸ்டர்: இங்கிலாந்து-இந்திய மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையே 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹீதர் நைட் 46 ரன் எடுத்தார். இந்திய பந்துவீச்சில், தீப்தி சர்மா 3 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் களம் இறங்கிய இந்தியா 46.3 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 220 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் மித்தாலி ராஜ் ஆட்டம் இழக்காமல் 75 ரன் எடுத்தார்.

மந்தனா 49 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஏற்கனவே முதல் 2 போட்டியில் இங்கிலாந்து வென்று தொடரை கைப்பற்றிய நிலையில் இந்தியா ஆறுதல் வெற்றி பெற்றது. மித்தாலி ராஜ் ஆட்டநாயகி விருதும், இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் தொடர் நாயகி விருதும் பெற்றனர். அடுத்ததாக 3 டி.20 போட்டி நடைபெற உள்ளது. மித்தாலி ராஜ் நேற்று 75 ரன் எடுத்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன் எடுத்த (10,277 ரன்) வீராங்கனை பட்டியலில் இங்கிலாந்து முன்னாள் வீராங்கனை சார்லோட் எட்வார்ட்சை (10,273) முந்தி முதல் இடத்திற்கு முன்னேறினார்.

Related Stories: