இடைவெளியை நினைவில் கொள்ளுங்கள்..! தடுப்பூசி போடப்பட்டிருக்கும் வரைபடத்தை வெளியிட்டு மத்திய அரசுக்கு ராகுல் காந்தி அறிவுரை

டெல்லி: இந்தியாவில் தடுப்பூசி போடப்பட்டிருக்கும் வரைபடத்தை வெளியிட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இடைவெளியை நினைவில் கொள்ளுங்கள் என மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. மூன்றாவது அலை வருவதற்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு குறைவாக இருந்ததால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டினர்.

ஆனால், தற்போது நிலைமை உணர்ந்து கொண்ட மக்கள் வரிசையில் நின்று தடுப்பு செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். இத்தகைய சூழலில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பது பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. தடுப்பூசி பற்றாக்குறை குறித்து அவ்வப்போது கேள்விகளை எழுப்பி வரும் ராகுல் காந்தி, ஜூலை வந்துவிட்டது தடுப்பூசி வரவில்லை என அண்மையில் பதிவிட்டு இருந்தார். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், ராகுல்காந்திக்கு என்னதான் பிரச்சனை? ஜூலை மாதத்திற்கான தடுப்பூசி விவரத்தை ஏற்கனவே வெளியிட்டு விட்டேன் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று மீண்டும் தனது டுவிட்டர் பக்கத்தில் தடுப்பூசி வரைபடத்தை வெளியிட்டுள்ள ராகுல்காந்தி, இந்தியாவின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் என மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வரைபடத்தில் 27% தடுப்பூசி குறைவாக செலுத்தப்பட்டு இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதாவது மூன்றாவது அலையை எதிர்கொள்ள நாளொன்றுக்கு 69 லட்சம் தடுப்பூசி செலுத்த வேண்டும். ஆனால் 50.8 லட்சம் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படுகிறது. இதனால் 27% இடைவெளி ஏற்பட்டிருப்பதை நினைவில் கொண்டு தடுப்பூசிகளை செலுத்துமாறு ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: