கர்ப்பிணி டோலி கட்டி தூக்கிவரப்பட்ட சம்பவம் எதிரொலி: குருமலையில் 3 மாதத்திற்குள் தார் சாலை பணிகள் முடிக்கப்படும்...! நேரில் ஆய்வு செய்த கலெக்டர் தகவல்

அணைக்கட்டு:  கர்ப்பிணியை டோலிகட்டி தூக்கி வரப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து நேரில் சென்று ஆய்வு செய்த கலெக்டர், குருமலையில் 3 மாதங்களுக்குள் தார் சாலை பணிகள் முடிக்கப்படும் என்று கூறினார். அணைக்கட்டு தாலுகா வேலூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்தியூர் ஊராட்சியில் உள்ளது குருமலை. இந்த மலை பகுதியில் குருமலை, நச்சிமேடு, வெள்ளக்கல் மலை, பள்ளகொல்லை மலை உள்ளிட்ட 4 மலை கிராமங்கள் உள்ளன. இதில் நூற்றுக்கணக்கான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். மலை அடிவாரத்தில் இருந்து குருமலைக்கு செல்ல சாலை வசதியில்லை. மேலும், சாலை வசதிக்காக ₹1.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் சாலை அமைக்கும் பணிகள் முடிக்கப்படவில்லை. கடந்த 30ம் தேதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நச்சிமேடு கிராமத்தை சேர்ந்த ராமுவின் மனைவி பவுனு(37), பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல டோலி கட்டி மலையில் இருந்து கீழே தூக்கிவரப்பட்டார். அப்போது அவருக்கு பிரசவ வலி அதிகமானதால் அவருக்கு ஆட்டோவில் பிரசவம் பார்க்கப்பட்டு, ஊசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.  

சாலை வசதி, மருத்துவ வசதியின்றி குருமலையில் வசிக்கும் மக்கள் படும் இன்னல்கள் குறித்து நேற்று முன்தினம் தினகரன் நாளிதழில் படத்துடன் விரிவான செய்தி வெளியானது. அதன்படி நேற்று காலை அனைத்துத்துறை அதிகாரிகளுடன் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் குருமலைக்கு சென்று ஆய்வு செய்தார். மேலும், அடிவாரத்தில் இருந்து மலைக்கு ஜீப் மூலம் சென்ற அவர், குருமலைக்கு செல்லும் கரடுமுரடான பாதையில் இறங்கி ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து குருமலைக்கு சென்று, அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்று  பள்ளகொல்லை கிராமத்தில் வசித்து வரும் மலைவாழ் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை  கேட்டறிந்தார். அப்போது அங்கு அரைகுறையாக தூர்வாரப்பட்டிருந்த கிணற்றை ஆய்வு செய்து உடனடியாக பணிகளை முடிக்க ஊரக வளர்ச்சி துறையினருக்கு உத்தரவிட்டார்.  அங்கிருந்து  குருமலை கிராமத்திற்கு வந்து மலையில் உள்ள மக்கள் தொகை, குருமலையில் செயல்படுத்தப்பட்டுள்ள பணிகள், செய்யப்பட உள்ள பணிகள் குறித்த விவரங்களை துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். பின்னர், அங்கிருந்த மலை கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது அவர்கள் தார்சாலை, மருத்துவமனை வசதி, உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர். அதைக்கேட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் விரைவில் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றார். இதைத்தொடர்ந்து கலெக்டர் நிருபர்களிடம் கூறுகையில், குருமலையில் தற்போது ஆய்வு செய்யப்பட்டது. மேலும், குருமலையில் 2 படுக்கைகள் கொண்ட தற்காலிக சுகாதார மையம் ஏற்படுத்தப்பட்டு, அதில் பணியாற்ற ஒரு டாக்டர், நர்ஸ் நியமிக்கப்பட உள்ளனர். மலை பகுதியில் அவசர தேவைக்காக ஒரு ஆம்புலன்ஸ் வசதியும் ஏற்படுத்தப்படும். கர்ப்பிணிகளை கண்காணித்து பிரசவத்திற்கு 5 நாட்கள் முன்னதாக அரசு மருத்துவமனையில் சேர்ப்பதை மருத்துவ அலுவலர்கள் உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மூன்று மாத்திற்குள் குருமலைக்கு தார்சாலை பணிகள் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார். அப்போது ஆர்டிஓ விஷ்ணுபிரியா, ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர் மஞ்சுநாதன், தாசில்தார் பழனி, பிடிஓக்கள் கனகவல்லி, ராஜலட்சுமி, ஊராட்சி செயலாளர் பாஸ்கரன், வனக்குழு தலைவர் அண்ணாமலை மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: