தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்!: ஒன்றிய அரசு போதிய தடுப்பூசி வழங்காததால் மக்கள் தவிப்பு..!!

மதுரை: ஒன்றிய அரசு போதிய அளவில் அனுப்பாததால் தமிழ்நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் இதுவரை சுமார் 1 கோடியே 41 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தடுப்பூசி போட மக்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் போதிய அளவில் தடுப்பூசிகளை ஒன்றிய அரசு வழங்காததால் பல இடங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதல் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கும் நிலையில் மிக குறைந்த அளவே ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள தடுப்பூசி மையத்தில் அதிகாலை 4 மணி முதலே டோக்கன் வாங்க மக்கள் காத்திருந்தனர். ஆனால் தடுப்பூசி கையிருப்பு இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததால் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதேபோல் தடுப்பூசி இருப்பு இல்லாததால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 105 மையங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் தடுப்பூசி செலுத்த ஆர்வமுடன் வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். கோவையில் தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் மாநகர் மற்றும் ஊரக பகுதிகளில் இன்று தடுப்பூசி செலுத்தப்படாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நேற்று வரை கையிருப்பில் இருந்த 10 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு விட்டதால் இருப்பு இன்றி தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டன.

Related Stories: