வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் பஞ்சாப்பில் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு: டெல்லியில் சங்கத் தலைவர் திகைத் கைதா?

புதுடெல்லி: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக டெல்லி மாநில எல்லைகளில் விவசாயிகள் முகாமிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் 8வது மாதம் தொடக்கத்தை முன்னிட்டு, ஜூன் 26ம் தேதி அனைத்து மாநில ஆளுநர் மாளிகையின் முன் நேற்று போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.  அதன்படி, நாடு முழுவதும் விவசாயிகள் நேற்று போராட்டம் நடத்தினர். அவர்களை ஆளுநர் மாளிகைக்கு செல்ல விடாமல் போலீசார் தடுத்தனர். பல மாநிலங்களில் விவசாயிகள் டிராக்டர் பேரணி, ஊர்வலம் நடத்தினர். இந்த போராட்டத்தின் முக்கிய களமான டெல்லி எல்லையில், நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்களை மீறி ஆளுநர் மாளிகைக்கு செல்ல முயன்றதாக, பாரதிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ராகேஷ் திகைத் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால், பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், டெல்லி போலீசார் அதை மறுத்தனர்.

இந்நிலையில், பஞ்சாப்பில் சண்டிகர் - மொகாலி எல்லையில் பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கில் திரண்டனர். போலீஸ் கட்டுபாட்டை மீறி ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி செல்ல முயன்ற இவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர். இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மிகப்பெரிய புரட்சி; திகைத் எச்சரிக்கை: டெல்லியில் திகைத் நேற்று அளி்த்த பேட்டியில், ‘‘மத்திய அரசு எங்களின் போராட்டத்தை புரிந்து கொள்ளவில்லை. விரைவில் மிகப்பெரிய புரட்சி நடக்கும். அடுத்த மாதம் 9ம் தேதியும், 24ம் தேதியும் டிராக்டர் பேரணிகள் நடத்தப்படும். அதற்காக 4 லட்சம் டிராக்டர்கள் தயாராக இருக்கின்றன,’’ என்றார்.

தோமர் வேண்டுகோள்

மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகள் ஆதரவாக உள்ளனர். இந்த சட்டங்களின் மீது மற்றவர்களுக்கு கருத்து வேறுபாடு இருந்தால், அவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருக்கிறது. எனவே, விவசாயிகள் தங்களின் போராட்டத்தை கைவிட வேண்டும்,’’ என்றார்.

Related Stories: