அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்றும் நாகரிக சமுதாயத்தில் ஆயுதமின்றி ேபாராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது கொடூரம்: தூத்துக்குடி சம்பவத்தில் மனித உரிமைகள் ஆணைய விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

மதுரை: ஆயுதமின்றி போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது நாகரீக சமுதாயத்தில் ெகாடூரமானது எனக்கூறியுள்ள ஐகோர்ட் கிளை, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.  மதுரை மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குநர் ஹென்றி டிபேன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நூறாவது நாள் போராட்டத்தன்று, அமைதியாக போராட்டம் நடந்தபோது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 14 பேர் பலியாகினர். இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன் வந்து விசாரித்தது. துப்பாக்கிச்சூடு தொடர்பாக விளக்கம் கேட்டு முந்தைய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் புலனாய்வு பிரிவினர், தூத்துக்குடி பகுதிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். இக்குழுவினர் தங்களின் விசாரணை அறிக்கையை தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்தனர். இதனிடையே, அப்போதைய தமிழக முதன்மை செயலர் தரப்பில் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பரில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு அறிக்கையளிக்கப்பட்டது.  இந்த அறிக்கை அடிப்படையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் 2018ம் ஆண்டு அக்டோபரில் தாமாக முன்வந்து பதிவு செய்த தங்களது வழக்ைக முடித்துக் கொண்டது. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் புலனாய்வு பிரிவினர் தாமாக முன்வந்து நடத்திய விசாரணை தொடர்பாக முறையான எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் இந்த நடவடிக்கை ஏற்புடையதல்ல. எனவே, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்த வழக்கை தொடர்ந்து விசாரிக்குமாறு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘எந்தவித ஆயுதமுமின்றி போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறக்கூடாது.

அரசியலைப்பு சட்டத்தை பின்பற்றும் நாகரிக சமுதாயத்தில் இதுபோன்ற கொடூரமான செயல் ஏற்புடையதா? பாதிக்கப்பட்டோருக்கு பணத்தை நிவாரணமாக கொடுத்து விட்டால் சரியாகி விடுமா’’ என்றனர்.

தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ‘‘‘‘துப்பாக்கிச்சூடு நடத்தியது தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் குழுவின் விசாரணை இடைக்கால அறிக்கை கடந்த மே 14ல் அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி, அரசுப் பணி உள்ளிட்ட நிவாரணங்கள் வழங்கப்படுகிறது. நீதிமன்றத்தின் கருத்தில் எங்களுக்கு மாற்று கருத்து இல்லை’’’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘நீதிபதி அருணா ஜெகதீசனின் இடைக்கால அறிக்கை தொடர்பான விவரங்களை, தமிழக அரசு தனது பதில்மனுவில் இந்த நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் புலனாய்வு பிரிவு தனது விசாரணை அறிக்கையை சீலிடப்பட்ட கவரிலோ, பதில்மனுவாகவோ தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை ஆக. 9க்கு தள்ளி வைத்தனர். வழக்கின் முக்கியத்துவம் கருதி விசாரணையை சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றியும் உத்தரவிட்டனர்.

Related Stories: