சாலையில் நடந்து சென்றபோது இளம்பெண்ணை ஆக்ரோஷமாக முட்டி 50 மீட்டர் தூரம் இழுத்து சென்ற மாடு: மேலும் பலர் காயம்

தாம்பரம்: திருவொற்றியூரில் எருமை மாடு ஒன்று ஆக்ரோஷமாக முட்டியதில் சாலையில் நடந்து சென்ற பெண் உள்பட பலர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் திடீரென ஆக்ரோஷமாக பொதுமக்களை தாக்கும் சம்பவங்கள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. இதேபோல், போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் திரியும் மாடுகளால் பலர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து வருகின்றனர்.

குறிப்பாக அமைந்தகரை, திருவல்லிக்கேணி, ஐஸ் ஹவுஸ் உள்ளிட்ட பல இடங்களில் பொதுமக்களை மாடு முட்டி தூக்கி வீசும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட மாட்டின் உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் மாடுகள் சாலையில் சுற்றித் திரிவாதை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. கூடுதல் அபராதம் விதித்து வருகிறது.

ஆனாலும், மாடுகளின் உரிமையாளர்கள் அச்சமின்றி மாடுகளை சாலையில் விடுகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் சாலையில் சுற்றித்திரிந்த மாடு, ஆறு பேரை முட்டியது. இதுகுறித்து வழக்குப்பதிந்த ஐஸ் ஹவுஸ் போலீசார், மாட்டின் உரிமையாளர் கிஷோர் மீது வழக்கு பதிவு செய்தனர். அந்த மாட்டை பறிமுதல் செய்த மாநகராட்சி ஊழியர்கள், அதன் உரிமையாளருக்கு அபராதம் விதித்தனர். இந்த சம்பவம் நடந்த 35 நாட்களில் மீண்டும் அதே பகுதியில் முதியவரை மாடு முட்டிய குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், திருவொற்றியூர் பகுதியில் சாலையில் திரிந்த மாடு ஒன்று, திடீரென பெண் ஒருவரை தூக்கி பந்தாடியதுடன், சாலையில் நடந்து சென்ற பலரை முட்டியதால் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவொற்றியூர் கிராம தெருவில் நேற்று சாலையில் நடந்து சென்ற எருமை மாடு ஒன்று திடீரென்று பொதுமக்கள் மீது பாய்ந்தது. இதில் மதுமதி என்ற இளம்பெண்ணை கொம்பால் தூக்கி சுமார் 50 மீட்டர் இழுத்துச் சென்றது.

இதை பார்த்த பொதுமக்கள், மிகவும் சிரமப்பட்டு எருமை மாட்டிடம் இருந்து அந்த இளம்பெண்ணை மீட்டனர். இதில் அவருக்கு கை கால் மற்றும் உடம்பில் சிராய்ப்பு ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அவரை பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து எருமை மாடு பொதுமக்கள் விரட்டியதால் அப்பகுதியில் உள்ள இருசக்கர வாகனம் மற்றும் இன்னும் சில நடந்து சென்றவர்களை மோதி தள்ளியது.

இதனால் பலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவலறிந்த மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கிராமத் தெரு பகுதிக்கு சென்றனர். பின்னர் அங்கு பொதுமக்களை முற்றிய மாடு மற்றும் சாலையில் திரிந்த எருமை மாடுகளை பிடித்து மாநகராட்சி கால்நடை பாதுகாப்பு மையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

சாலையில் மாடுகளை திரிய விடக்கூடாது என்று மாநகராட்சி அறிவித்துள்ள நிலையில் திருவொற்றியூர் பகுதியில் மாடுகளை சாலையில் மேய விடுவதும், மாடு முட்டி பொதுமக்கள் காயமடைவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சாலையில் நடந்து சென்றபோது இளம்பெண்ணை ஆக்ரோஷமாக முட்டி 50 மீட்டர் தூரம் இழுத்து சென்ற மாடு: மேலும் பலர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: