திம்பம் மலைப்பாதையில் விறகு லாரி கவிழ்ந்து விபத்து

சத்தியமங்கலம் : தமிழகம் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக இரு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று காலை கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதியில் இருந்து விறகு பாரம் ஏற்றிய லாரி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் செல்வதற்காக திம்பம் மலைப்பாதையில் வந்து கொண்டிருந்தது. 9வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பும்போது அதிக பாரம் காரணமாக பழுது  ஏற்பட்டதால் நகர முடியாமல் நின்றது. இதன் காரணமாக மலைப்பாதையின் இருபுறமும் மற்ற சரக்கு வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

இதையடுத்து சத்தியமங்கலத்திலிருந்து கிரேன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு கொண்டை ஊசி வளைவில் இருந்து லாரியை நகர்த்தினர். இதையடுத்து விறகு லாரி மீண்டும் புறப்பட்டு மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது  6வது கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. லாரியில் இருந்த விறகு கட்டைகள் சாலை முழுவதும் சிதறின. இதனால் மீண்டும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் கிரேன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு லாரி நேற்று மதியம் மீட்கப்பட்டது. விபத்து காரணமாக திம்பம் மலைப்பாதையில் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories: