சட்டப்பேரவை தேர்தலை பிறகு பார்க்கலாம் சிறப்பு அந்தஸ்துதான் வேண்டும்: பிரதமரிடம் ஜம்மு காஷ்மீர் தலைவர்கள் வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் வேண்டாம். சிறப்பு அந்தஸ்துதான் வேண்டும்’ என்று பிரதமர் மோடியுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.    ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து, கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய பாஜ அரசு ரத்து செய்து, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தலைவர்கள் அனைவரும் வீட்டு சிறையில் வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஜம்மு காஷ்மீர், லடாக்கில் 2 ஆண்டுகளுக்கு பின் தற்போது சூழல் மெல்ல மாறி வருவதால், டிசம்பர் மாதம் அல்லது அடுத்த ஆண்டு மார்ச்சில் சட்டப்பேரவை தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஜம்மு காஷ்மீர் தலைவர்களை டெல்லிக்கு அழைத்து, பிரதமர் மோடி தனது இல்லத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்கா, பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜித்தேந்தர் சிங், ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சிகள் அடங்கிய குப்கர் கூட்டமைப்பு, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட 8 அரசியல் கட்சிகளை சேர்ந்த முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, குலாம் நபி ஆசாத், உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உட்பட 14 தலைவர்கள் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில் பேசிய ஜம்மு காஷ்மீர் தலைவர்கள் அனைவரும், ‘காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து மற்றும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். சட்டப்பேரவை தேர்தல் இப்போது வேண்டாம். மக்கள் எதிர்ப்பு சட்டங்களை கைவிட வேண்டும். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்,’ என ஒருமித்த குரலில் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினர்.

அனைவரின் கருத்துகளை பொறுமையாக கேட்ட மோடி, ‘‘ஜனநாயகத்தை வலிமைப்படுத்தவே இந்த கூட்டம் நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீரில் தற்போது தொகுதி மறுவரையறை பணி நடந்து வருகிறது. இது முடிந்த பின் தேர்தல் நடத்தப்படும். ஜம்மு-காஷ்மீரில் அனைத்து சமூகத்தினருக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். எனவே, அனைவரும் ஒன்றாக பணியாற்ற வேண்டும்,’’ என்று பேசியதாக கூறப்படுகிறது.  இந்த கூட்டம் மூன்றரை மணி நேரம் நடந்தது.

அமைதியான தேர்தல் நடத்தப்படும்

ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு மத்திய உள்துறை அமித்ஷா டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஜம்மு-காஷ்மீர் குறித்த இன்றைய சந்திப்பு மிகவும் நல்ல சூழலில் நடத்தப்பட்டது. எல்லோரும் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு மீதான தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர்.  நாடாளுமன்றத்தில் வாக்குறுதியளித்தபடி மாநிலத்தில் அமைதியான தேர்தலை நடத்துவது முக்கியமான மைல்கல்லாக பார்க்கிறோம்,’ என கூறியுள்ளார்.

உள்நாட்டில் பொம்மைகள் தயாரிப்பை அதிகரிக்க வேண்டும்

டாய்கேதான்-2021 மாநாட்டில் பங்கேற்றவர்களுடன் நேற்று கலந்துரையாடிய பிரதமர் மோடி கூறியதாவது: இந்தியாவில் 80 சதவீத பொம்மைகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் மூலம், பல ஆயிரம் கோடி ரூபாய் வெளிநாடுகளுக்கு அந்நிய செலாவணியாக கிடைக்கிறது. எனவே இந்த தொழிலில் வர்த்தகத்தை பெருக்க, குழந்தைகளை கவரும் வகையில் பொம்மை, பொம்மை விளையாட்டுகளை இந்திய கலாசாரத்துடன் சுவாரசியமிக்க வகையில் உருவாக்க வேண்டும் என்றார்.

Related Stories:

>