அமெரிக்காவில் பீதி கிளம்பியுள்ள நிலையில் குஜராத்தில் 2 மாவட்டங்களில் வானில் பறந்த மர்ம தட்டுகள்: வேற்றுகிரக வாசிகளின் கைவரிசையா?

ஜூனாகத்:  குஜராத்தில் கடந்த திங்கட்கிழமை பறக்கும் தட்டுகள் போன்ற அடையாளம் தெரியாத மர்ம பொருட்கள் மின்னல் வேகத்தில் பறந்து சென்றதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் அடிக்கடி பறக்கும் தட்டுகள் பறப்பதும், திடீர் திடீரென தோன்றி மறைந்த மர்ம உலோகத் தூணும் மக்களிடம் பீதியை கிளப்பியது. இதனால், அ்மெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக, அந்நாட்டு ராணுவ தலைமையகமான பென்டகன் கவலை தெரிவித்துள்ளது.  இந்த பறக்கும் தட்டுகள் பற்றிய முக்கிய அறிக்கையை இன்று அது வெளியிட உள்ளது. அமெரிக்காவில் தோன்றி மறைந்த உலோகத் தூண், இந்தியாவிலும் தோன்றி மறைந்தது. இது, வேற்றுகிரக வாசிகளின் செயலாக இருக்கலாம் என்று பரவலாக பேசப்படுகிறது.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் உள்ள ஜூனாகத்,  ஜாம்நகர் மாவட்டங்களில் கடந்த திங்கட்கிழமை இரவு வானில் அடையாளம் தெரியாத மர்ம பொருட்கள் மின்னல் வேகத்தில் பறந்து சென்றுள்ளன. பிரகாசமான வெளிச்சத்துடன் பறந்து சென்ற இவற்றை, பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர். இதை சிலர் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர். 4 முதல் 7 மர்ம பொருட்கள் இவ்வாறு பறந்து செல்வது அதில் பதிவாகி உள்ளது. அவை ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரகவாசிகள் சென்ற பறக்கும் தட்டாக இருக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  

இது குறித்து குஜராத் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலின் ஆலோசகர் நரோடாம் சாஹு கூறுகையில், “இத்தகைய  ஒளி மூன்று காரணங்களால் ஏற்படலாம். விண்கல்லின் சிறிய பகுதி பூமியில் நுழைந்ததால் ஏற்பட்டு இருக்கலாம் அல்லது ஒரு எரி நட்சத்திரமாக இருக்கலாம். மேலும், செயற்கைக்கோள்கள் பூமியின் சுற்றுப் பாதையை கடந்து சென்றதால் கூட இந்த பிரகாசமான ஒளிகள் தோன்றி இருக்கக்கூடும். ஏனெனில், விண்வெளியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  செயற்கைக்கோள்கள் பூமிக்கு மிக அருகே சுற்றி வருகின்றன,’’ என்றார்.

கவலைப்பட ஒன்றுமில்லை இது பற்றி விஞ்ஞானிகள் கூறிய மேலும் சில கருத்துகள் வருமாறு:

* அமெரிக்காவில் எலன் மஸ்கின் ஸ்பேஸ்-எக்ஸ் விண்கலத்துடன் பால்கன் ராக்கெட்டை ஏவிய போதும், அந்்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற ஒளி வெளிச்சம் தோன்றியது.   

* குஜராத்தின் சவுராஷ்டிரா பிராந்தியத்தில் ஏற்கனவே, ஒரே நேர் கோட்டில் 30-40 மர்ம பறக்கும் ஒளியை மக்கள் பார்த்துள்ளனர்.

* எனவே, குஜராத்தில் மக்கள் பார்த்து இருப்பதை செயற்கைக்கோளில் இருந்து வெளிப்பட்ட வெளிச்சம்தான் என்பதை உறுதியாக கூற முடியும். இது பற்றி கவலைப்பட எதுவுமில்லை.

Related Stories: