காரைக்காலில் மாங்கனி திருவிழா: மாங்கனிகளை இறைத்தல் வைபவம் இணையதளங்களில் நேரடி ஒளிபரப்பு

காரைக்கால்: காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழாவையொட்டி இன்று மாங்கனி இறைத்தல் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் எளிமையாக நடந்தது. கோயில் இணையதளங்கள் மூலம் இந்நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.  63 நாயன்மார்களில் ஒருவரும் அம்மை, அப்பன் இல்லாத இறைவன் சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்ட சிறப்பு பெற்றவருமான காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூரும் விதமாக காரைக்காலில் உள்ள காரைக்கால் அம்மையார் கோயிலில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா விமரிசையாக நடைபெறும். கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக மாங்கனி திருவிழா பக்தர்களுக்கு அனுமதியின்றி கொண்டாடப்பட்டது. இந்தாண்டும் மாங்கனி திருவிழா அதேபோல் மாப்பிள்ளை அழைப்புடன் கடந்த 21ம் தேதி துவங்கியது.

நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று மாலை 3 மணிக்கு பிச்சாண்டவருக்கு மகா அபிஷேகம் நடந்தது.  முக்கிய நிகழ்ச்சியான மாங்கனி இறைத்தல் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் கோயில் வளாகத்திலேயே எளிமையான முறையில் மாங்கனி வீசி எறிந்து பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. மதியம் 2 மணிக்கு மேல் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மாங்கனி திருவிழாவில் சுவாமி வீதியுலாவின்போது பக்தர்கள் வீதிகளில் கூடியும், வீட்டு மாடிகளில் நின்றபடியும் சுவாமி மீது மாம்பழங்களை வீசி எறிவர். அதை பக்தர்கள் பிடித்து பிரசாதமாக சாப்பிடுவர். கொரோனா பரவல் காரணமாக இன்று காலை கைலாசநாதர் கோயில் வளாகத்துக்குள் சிவாச்சாரியார்கள் மற்றும் கோயில் அறங்காவலர்கள் ஒருவருக்கொருவர் மாங்கனிகளை வீசி எறிந்து பிடிக்கும் நிகழ்ச்சி எளிமையான முறையில் நடந்தது. இதில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இந்த நிகழ்ச்சி அனைத்து கோயில் இணையதளங்கள், யூடியூப் மற்றும் உள்ளூர் தொலைகாட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Related Stories: