இந்தியாவில் கொரோனா டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 40ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவின் டெல்டா பிளஸ் வைரஸ் கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா டெல்டா வைரஸ் மரபணு மாறி டெல்டா பிளஸ் என்ற வைரஸ் உருவாகி உள்ளது. இது மனிதர்களின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி உடலுக்குள் செல்லும் திறன் கொண்டது. இந்நிலையில் 28 ஆய்வகங்களின் கூட்டமைப்பான இன்சாகோக்கின் சமீபத்திய கண்டறிதல்களை தொடர்ந்து, கவலையளிக்கக்கூடிய டெல்டா பிளஸ் வகை குறித்த அறிவுறுத்தலை மகாராஷ்டிரா, கேரளா மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கு மத்திய சுகாதார அமைச்சகம் வழங்கியுள்ளது.

மகாராஷ்டிராவின் ரத்னகிரி மற்றும் ஜல்கான் மாவட்டங்களிலும், கேரளாவின் பாலக்காடு மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களிலும், மத்தியப் பிரதேசத்தின் போபால் மற்றும் சிவபுரி மாவட்டங்களிலும் டெல்டா பிளஸ் வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக இந்த மூன்று மாநில தலைமைச் செயலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மத்திய சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இதுவரை 22 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 16 பேர் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் கேரளா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதனைத் தொடர்ந்து ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள பொது சுகாதார எதிர்வினை நடவடிக்கைகளில் இன்னும் கவனம் செலுத்துமாறு மகாராஷ்டிரா, கேரளா மற்றும் மத்திய பிரதேசத்தை மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டது.

இந்நிலையில் இந்தியாவில் கோவிட்-19-ன் டெல்டா பிளஸ் வைரஸ் கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் டெல்டா பிளஸ் வைரஸ் 40 ஆக உள்ளது. டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து இப்போதே மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கையை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: