வெள்ளை அறிக்கை வெளியிட்டார் ராகுல் கொரோனா 3ம் அலைக்கு அரசு தயாராக வேண்டும்: பிரதமரின் கண்ணீர் உயிர்களை காப்பாற்றாது என கடும் விமர்சனம்

புதுடெல்லி:  கொரோனா 3ம் அலையை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக வேண்டுமென வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, ‘பிரதமரின் கண்ணீர் உயிர்களை காப்பாற்றாது’ என கடுமையாக விமர்சித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்து வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மத்திய அரசின் கொரோனா மேலாண்மை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட்ட ராகுல் கூறியதாவது: கொரோனா முதல் மற்றும் 2வது அலையை மத்திய அரசு கையாண்ட விதம் பேரழிவு என்பது அனைவரும் அறிந்ததே. கொரோனா 2ம் அலையை பிரதமர் மோடி தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர் மேற்கு வங்கம் மற்றும் பிற மாநில தேர்தலில் போட்டி போடுவதிலேயே குறியாக இருந்து விட்டார். பிரதமரின் கண்ணீரால் சொந்தங்களை இழந்தவர்களின் கண்ணீரை துடைத்து விட முடியாது. பிரதமரின் கண்ணீர் உயிர்களை காப்பாற்றாது.

ஆனால் ஆக்சிஜன் காப்பாற்றும். மத்திய அரசின் குறைகளை சுட்டிக்காட்டுவதற்காக இந்த வெள்ளை அறிக்கையை வெளியிடவில்லை. இந்த நாடு கொரோனா மூன்றாவது அலைக்கு தயாராவதற்கு உதவுவதற்காக தான்   வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. மூன்றாவது அலை தாக்கும்  என்பதை இந்த உலகமே நன்கு அறியும் . மூன்றாவது அலைக்கு பிறகும் கொரோனா வைரஸ் பிறழ்வு ஏற்படக்கூடும் என்ற அளவிற்கு சூழல் உள்ளது. எனவே, கொரோனா மூன்றாவது அலைக்கு மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும். 2வது அலை மோசமாக இருந்ததால், 3வது அலையும் மோசமாக இருக்கக் கூடும். எனவே  100 சதவீதம் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும்.

கொரோனாவை எதிர்த்து போரிடுவதில் தடுப்பூசி முக்கிய ஆயுதம். ஆகவே முடிந்த வரையில் சீக்கிரமாக அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும். இதில் ஒருநாள் சாதனை எல்லாம் போதாது. தினமும் அதிகப்படியானோருக்கு தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசு பாகுபாடு பார்க்கக் கூடாது. பாஜ ஆளும் மாநிலம் எதிர்க்கட்சி ஆளும் மாநிலம் என பிரித்துப் பார்க்கக் கூடாது. அனைவருக்கும் போதிய அளவு தடுப்பூசி வழங்கப்பட வேண்டும். இவ்வாறு ராகுல் தெரிவித்தார்.

அரசியல் செய்கிறார்  

ராகுல் வெளியிட்ட வெள்ளை அறிக்கை குறித்து பாஜ தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா அளித்த பேட்டியில், ‘‘கொரோனாவுக்கு எதிரான போரில் மத்திய அரசு குறிப்பிட்ட வெற்றியை எட்டும் போதெல்லாம் காங்கிரசும், ராகுலும் அரசியல் செய்கின்றனர். நேற்று (நேற்று முன்தினம்) ஒரே நாளில் 86 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா 2ம் அலை ஆரம்பித்ததே காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் இருந்துதான். உலகளாவிய தடுப்பூசி கொள்முதல் என ஆரம்பித்ததே காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள். இப்போது அதை திசை திரும்புகின்றனர்’’ என்றார்.

உயிரிழந்த 90% பேரை காப்பாற்றியிருக்கலாம்

ராகுல் மேலும் கூறுகையில், ‘‘கொரோனா மரணங்களை மத்திய அரசு மறைக்கிறது. உண்மையில் அரசு கூறும் இறப்பு எண்ணிக்கையை விட 5-6 மடங்கு அதிகமாக இருக்கலாம். 2வது அலையில் பலியானவர்களில் 90% பேரின் உயிர்களை காப்பாற்றியிருக்கலாம். சரியான நேரத்தில் ஆக்சிஜன் கிடைத்திருந்தால் பலரும் உயிர் பிழைத்திருப்பார்கள். எனவே, 3ம் அலைக்குள் சுகாதார கட்டமைப்புகளை மத்திய அரசு வலுப்படுத்த வேண்டும்’’ என்றார்.

Related Stories:

>