வெளிநாட்டு பெண் அளித்த புகாரில் பத்மா சேஷாத்திரி பள்ளியின் கராத்தே மாஸ்டர் மீது மேலும் ஒரு பாலியல் வழக்குப்பதிவு

* புகார் பட்டியல்  நீள்வதால் அடுத்தடுத்த வழக்குகளில் கைதாகிறார்

* சிபிசிஐடி அதிரடி நடவடிக்கை

* வெளிநாட்டு பெண் என்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு கெபிராஜ் ஒரு நாள் தனது பயிற்சி மையத்திற்கு இரவு நேரம் வரவழைத்து தனியாக பயிற்சி கொடுத்துள்ளார். அப்போது அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

சென்னை: ஜூடோ பயிற்சியின் போது தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தாக வெளிநாட்டு பெண் ஒருவர் அளித்த புகாரின் படி, சிபிசிஐடி போலீசார் பத்மா சேஷாத்திரி பள்ளியின் கராத்தே மாஸ்டர் கெபிராஜ் மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் நீள்வதால் அடுத்தடுத்த வழக்குகளில் அவர் கைது செய்யப்படுவார் என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.  பத்மா ேசஷாத்திரி பள்ளி குழுமத்திற்கு சொந்தமான சென்னை விருகம்பாக்கம் கிளையில் உள்ள பத்மா சேஷாத்திரி மில்லினியம் பள்ளியின் கராத்தே மாஸ்டர் கெபிராஜ் மீது பள்ளி மாணவி ஒருவர், ஜூடோ போட்டியில் கலந்து கொள்ள காரில் அழைத்து சென்ற போது கராத்தே மாஸ்டர் கெபிராஜ் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார் என்று புகார் அளித்தார்.

இதையடுத்து, அப்பள்ளியின் கராத்தே மாஸ்டர் கெபிராஜை அண்ணாநகர் மகளிர் போலீசார் பாலியல் பலாத்காரம் உட்பட 5 பிரிவிகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.  கெபிராஜிடம் நடத்திய விசாரணையில், பள்ளி  கராத்தே மற்றும் ஜூடோ பயிற்சியின்போது மாணவிகளை தனி அறைக்கு அழைத்து சென்று மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது. அதை அவரது 3 நண்பர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.   அதைதொடர்ந்து சிபிசிஐடி போலீசார் கராத்தே மாஸ்டர் கெபிராஜை 2 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியது. மேலும், பத்மா சேஷாத்திரி பள்ளியின் பெண் நிர்வாகி ஒருவருடன் நெருங்கிய நட்பில் இருந்து வந்ததும் சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்தது. பெண் நிர்வாகியின் நட்பால் கெபிராஜ் தைரியமாக பள்ளி மாணவிகள் மற்றும் பயிற்சிக்கு வரும் இளம் பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து கராத்தே மாஸ்டர் கெபிராஜால் பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் இளம் பெண்கள் புகார் அளிக்கலாம் என்றும் புகார் அளிக்கும் நபர்கள் குறித்து ரகசியம் காக்கப்படும் என்று சிபிசிஐடி போலீசார் உறுதி அளித்தனர். அதைதொடர்ந்து கெபிராஜ் மீது வெளிநாட்டு பெண், மாணவிகள் என 30க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தது. அந்த புகாரின், படி சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். அதில், வெளிநாட்டு பெண் பத்மா சேஷாத்திரி பள்ளி கராத்தே மாஸ்டர் கெபிராஜால் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனே சிபிசிஐடி போலீசார் வெளிநாட்டு பெண்ணிடம் தொடர்பு கொண்டு விசாரணை நடத்திய போது, பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. வெளிநாட்டு பெண் சென்னையில் தங்கி,  கெபிராஜ் நடத்தி வந்த ஜூடோ பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்டார்.

அவர் வெளிநாட்டு பெண் என்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு கெபிராஜ் ஒரு நாள் தனது பயிற்சி மையத்திற்கு இரவு நேரம் வரவழைத்து தனியாக பயிற்சி கொடுத்துள்ளார். அப்போது அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். பிறகு வெளிநாட்டு பெண்ணிற்கு மதுவிருந்து அளித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அவர் எடுத்து வீடியோவை வைத்து கொண்டு பல முறை வெளிநாட்டு இளம் பெண்ணை மிரட்டி தனது நண்பர்களுடன் இணைந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தெரியவந்தது.  வெளிநாட்டு பெண் என்பதால் அப்போது கெபிராஜ் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் பல மாதங்கள் சென்னையில் தங்கி இருக்க வேண்டி நிலை ஏற்படும், இதனால் தனது வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்படும் என்பதால் தனது சொந்த நாட்டிற்கு வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

கெபிராஜ் குறித்து தொலைக்காட்சிகளில் பார்த்து அவர் மீது தற்போது புகார் அளித்துள்ளதாகவும், எனது புகாரின் படி காவல் துறை கடுமையாக நடவடிக்கை கெபிராஜ் மற்றும் அவரது நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க விசாரணையில் வெளிநாட்டு பெண் தெரிவித்ததாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர். அதைதொடர்ந்து சிபிசிஐடி போலீசார் வெளிநாட்டு பெண் அளித்த பாலியல் புகாரை தொடர்ந்து பத்மா சேஷாத்திரி பள்ளி கராத்தே மாஸ்டர் மீது பாலியல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் தனியாக வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் வெளிநாட்டு பெண் அளித்த புகாரில் சிறையில் உள்ள கெபிராஜை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்த உள்ளனர். அதற்கான பணிகளில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டு வருவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: