4 மாதங்களுக்குப் பிறகு கொரோனா தினசரி பாதிப்பு: 60 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது

புதுடெல்லி: கொரோனா தினசரி பாதிப்பு 4 மாதங்களுக்குப் பிறகு 60 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது.  நாடு முழுவதும் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் பாதிப்பு 60 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு மற்றும் பலி குறித்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

 கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 58,419 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த 81 நாளில் பதிவான குறைந்தபட்ச தினசரி தொற்றாகும். கடந்த மார்ச் 31ம் தேதி ஒரே நாளில் 72,189 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

 மொத்த பாதிப்பு 2 கோடியே 98 லட்சத்து 81 ஆயிரத்து 965 ஆக அதிகரித்துள்ளது

 கடந்த 24 மணி நேர்தில் 1,576 பேர் பலியாகி உள்ளனர். இது கடந்த 63 நாளில் பதிவான குறைந்தபட்ச பலி. மொத்த பலி எண்ணிக்கை 3 லட்சத்து 86 ஆயிரத்து 713 ஆக அதிகரித்துள்ளது.

 சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 லட்சத்து 29 ஆயிரத்து 243 ஆக சரிந்துள்ளது.

 நேற்று ஒரே நாளில் 89,195 பேர் குணமடைந்துள்ளனர். தொடர்ந்து 38வது நாளாக தினசரி தொற்று பாதிப்போர் எண்ணிக்கையை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகிறது.

 இதுவரை 26 கோடியே 4 லட்சத்து 19 ஆயிரத்து 412 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்னும் 3.06 கோடி தடுப்பூசி மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் இருப்பில் இருக்கின்றன.  இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை கூறி உள்ளது.

இந்திய விமானங்களுக்கு 25 முதல் யுஏஇ அனுமதி

இந்தியாவில் கொரானா 2வது அலை தாக்கியதால், இந்திய விமானங்களுக்கு கடந்த ஏப்ரல் 25ம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்தது.  இதனால், கடந்த 2 மாதங்களாக துபாய், ஷார்ஜா, அபுதாபி போன்ற ஐக்கிய அரபு அமீரக நகரங்களில் வேலைவாய்ப்பு விசாவில்  பணியாற்றி விடுமுறையில் இந்தியாவுக்கு சென்றவர்கள், மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு திரும்ப முடியாமல் சிரமப்பட்டனர். இந்தியாவில் தற்போது தொற்று குறைந்துள்ளதால், வரும் 23ம் தேதி முதல் இந்திய விமானங்க‌ளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. தனது நாட்டு அரசால் அங்கீகரிக்கப்பட்ட 2 தடுப்பூசிகளை போட்டுக் கொண்டவர்கள், பயணத்துக்கு முன்பாக 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றுகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அது அறிவித்துள்ளது.

Related Stories: