சென்னை: கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏரிகளின் நீர் மட்டம் உயர்ந்து வருவதாக நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தெலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு கடந்த 16ம் தேதி கிருஷ்ணா நீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கடந்த 16ம் தேதி காலை 9 மணிக்கு தமிழக எல்லைக்கு வந்தடைந்தது. ஆரம்பத்தில் 100 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. தொடர்ந்து, படிப்படியாக நீர்வரத்து அதிகரித்தது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி 446 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் 3231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் மட்டம் 205 மில்லியன் கன அடியாக உயர்ந்தது.
இதை தொடர்ந்து பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.